கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – மூச்சுத்திணறலால் 11 பேர் மயக்கம் – பரபரப்பு சம்பவம்
Karnataka CM Event Stampede: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 11க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்தராமையா
பெங்களூர், அக்டோபர் 20 : கர்நாடகா (Karnataka) முதல்வர் சித்தராமையா கலந்து கொண்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூர் தாலுகா மைதானத்தில் நடந்துள்ளது. புத்தூர் எம்.எல்.ஏ அசோக் ராய் தலைமையிலான ‘அசோக ஜனமனா’ நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றபோது, கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டது. இதன் விளைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் மயக்கம்
கர்நாடகா மாநிலம் புத்தூரில் உள்ள தாலுகா மைதானத்தில் அக்டோபர் 20, 2025 அன்று நடைபெற்ற அசோக் ஜனமனா-2025 நிகழ்ச்சிக்கு புத்தூர் எம்எல்ஏ அசோக் ராய் தலைமை தாங்கினார், இதில் முதல்வர் சித்தராமையாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தின் அளவை விட அதிகமான மக்கள் வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மூச்சுத் திணறல் காரணமாக மக்கள் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் உடனடியாக புத்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : காதல் தொல்லை கொடுத்த இளைஞர்.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
என்ன நடந்தது?
இந்த நிகழ்வு எம்எல்ஏ அசோக் ராய்க்கு சொந்தமான அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் துணிகளை விநியோகிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. முதல்வர் சித்தராமையா இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மக்கள் தங்களுடன் சிறு குழந்தைகளையும் அழைத்து வந்ததிருந்தனர். மேலும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்த மைதானத்தில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 19, 2025 அன்று காவல் துறை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியது.
போதுமான நாற்காலிகள் வழங்காததற்காக மாவட்ட காவல் துறையை ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கூடுதல் இருக்கைகளை வழங்குமாறு கேட்டனர். பின்னர், ஏற்பாட்டாளர்கள் கூடுதல் நாற்காலிகளையும் வழங்கினர். இருப்பினும், இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.
இதையும் படிக்க : நாடாளுமன்றத்திற்கு அருகே எம்பி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – பரபரப்பு சம்பவம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசல் வழக்கில் 41 பேர் உயரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் அடங்கும் முன் கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மயக்கமடைந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து இது போன்ற அரசியல் கூட்டங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.