Dengue Fever: உலகளவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி..?

Dengue Fever Outbreak: உலகளவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1996 முதல் 1312% அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள கொசு கடி தடுப்பு போன்றவை மேற்கொள்வது அவசியம்.

Dengue Fever: உலகளவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி..?

டெங்கு காய்ச்சல்

Published: 

09 Sep 2025 11:55 AM

 IST

கொசுக்களால் பரவும் வைரஸ் நோயான என்ஜூ காய்ச்சல் அதாவது டெங்கு காய்ச்சல் (Dengue Fever), தற்போது உலகளவில் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறி வருகிறது. அதாவது, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இப்போது ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. அதன்படி, இந்த 2025 ஆண்டு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறது. உலகின் முன்னணி சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவை நிறுவனமான இண்டர்நேஷனல் எஸ்.ஓ.எஸ் (International SOS), 2022ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் டெங்கு தொடர்பான பிரச்சனைகள் 15% அதிகரிப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் நிலைமை எப்படி..?

இந்தியாவை பொறுத்தவரை நிலைமையானது மிகவும் கவலைக்குறியதாக உள்ளது. அதாவது, கடந்த 1996ம் ஆண்டு முதல் டெங்கு பாதிப்பானது 1312 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 35 மாநிலங்களில் 2.33 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது சுகாதார அமைப்புகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவை தொடர்ந்து, வங்கதேசமும் டெங்கு பாதிப்புகளின் அதிகரிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சுகாதார நிபுணர்கள் இந்த டெங்கு பாதிப்பு அதிகரிப்புக்கு மழை தண்ணீர் தேங்குதல் மற்றும் கொசு இனப்பெருக்கமே காரணம் என்று கூறுகின்றனர்.

ALSO READ: காலையில் அதிகளவில் பதிவாகும் மாரடைப்பு.. ஆரம்பகால இதய ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி..?

விழிப்புணர்வு:

டெங்கு பரவல் குறித்து சர்வதேச SOS இந்தியா மருத்துவ இயக்குநர் டாக்டர் விக்ரம் வோரா கூறியதாவது, “டெங்கு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லேசான அறிகுறிகளை பெறலாம். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு கடுமையான பிரச்சனையை உண்டாக்கலாம். அதேபோல், கடந்த காலத்தில் டெங்கு தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் கடுமையான டெங்கு ஏற்படும் அபாயம் அதிகம்.

சில நாடுகளில் டெங்குவுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்தாலும், இந்தியாவில் அதை பயன்படுத்த இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. 2 தடுப்பூசிகள் இங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதுவரை கொசு கடித்தலை தவிர்ப்பதுதான் சிறந்த பாதுகாப்பு முறையாக உள்ளது.

நிறுவனங்கள் ஊழியர்கள் கல்வி, பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது டெங்கு பரவலின் தாக்கத்தை குறைப்பதில் இது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை டெங்குவிலிருந்து பாதுகாக்க உதவும் 5 முக்கிய பரிந்துரைகளை சர்வதேச SOS வெளியிட்டுள்ளது.

பயண திட்டம்:

நிறுவன ஊழியர்கள் பயணம் செய்வதற்கு முன், டெங்கு அபாயஙக்ள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் சேருமிடத்தில் மருத்துவ பராமரிப்பு கிடைப்பது குறித்து விரிவான சுகாதார விளக்கங்களை பெற வேண்டும்.

கொசு கடி தடுப்பு:

பூச்சி விரட்டிகள், பாதுகாப்பு ஆடைகள் மற்றும் கொசு வலைகள் அல்லது ஏர் கண்டிஷனிங் கொண்ட தங்குமிடங்களை பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

சுற்றுச்சூழல் கட்டுப்பாடு:

பணியிடங்களை சுற்றி தேங்கும் நிற்கும் நீரில் கொசுக்கள் பெருகும் இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து அகற்ற வேண்டும். இதனால், சுற்றுப்புறம் பாதுகாப்பானதாக இருக்கும்.

பணியாளருக்கு விழிப்புணர்வு:

பணியிடங்களில் விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதனால், ஊழியர்கள் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற முடியும்.

ALSO READ: உங்கள் சிறுநீர் நிறம் மாறுகிறதா? கவனம்! இது பித்தப்பை கற்களின் அறிகுறியா..?

மருத்துவ உதவி வழங்குதல்:

டெங்கு காய்ச்சலை திறம்பட நிர்வகிப்பதற்கும், சிக்கல்கள் கடுமையான டெங்குவாக மாறுவதஈ தடுப்பதற்கும் சரியான நேரத்தில் சுகாதார பராமரிப்பை அணுகுவது மிக முக்கியம்.