வயதான காலத்தில் வரும் தொப்பையை விரட்ட புதிய வழி: அதிரடி ஆய்வு முடிவுகள்!
Reducing Age-Related Belly: வயது முதிர்வின் காரணமாக உடலின் உட்புற உறுப்புகளைச் சுற்றிச் சேரும் அபாயகரமான 'விசரல்' கொழுப்பை, முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையுடனான ஹார்மோன் சிகிச்சையின் மூலம் கணிசமாகக் குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. குறிப்பாக 60 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் இடுப்புச் சதையைக் குறைக்க டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மாற்றங்கள் முக்கியப் பங்காற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
வயது ஏற ஏற நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, தோலுக்கு அடியில் இருக்க வேண்டிய கொழுப்பு மெல்ல மெல்ல நகர்ந்து, உடலின் உட்புற உறுப்புகளைச் சுற்றித் தங்க ஆரம்பிப்பது. இதனை ‘விசரல் கொழுப்பு’ (Visceral Fat) என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குறிப்பாக 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த அடிவயிற்று கொழுப்பு பெரும் சவாலாக அமைகிறது. இது வெறும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்லாமல், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற உயிருக்கே ஆபத்தான பாதிப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. தற்போது கனெக்டிகட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வில், இந்தப் பிரச்சனைக்கு ஒரு பயனுள்ள தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்தான விசரல் கொழுப்பும் அதன் பாதிப்புகளும்
அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தோலுக்கு மிக அருகில் இருப்பது அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கல்லீரல், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுற்றித் தங்கும் கொழுப்பு மிகவும் அபாயகரமானது. வயது முதிர்வின் காரணமாக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, கொழுப்பு இந்த உட்புற உறுப்புகளை நோக்கி இடம்பெயர்கிறது. இது உடலில் தேவையற்ற வீக்கத்தை (Inflammation) உண்டாக்கி, நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் தான் வயதானவர்கள் ஒருமுறை நோய்வாய்ப்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு விளக்குகிறது.
ஹார்மோன் சிகிச்சையும் உடற்பயிற்சியும் இணைந்த தீர்வு
இந்த ஆய்விற்காக 65 வயதிற்கு மேற்பட்ட சுமார் 66 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் இடுப்பு எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு குழுவினருக்கும் உடற்பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில், ஒரு குழுவிற்கு மட்டும் கூடுதலாக ‘டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் ஜெல் வழங்கப்பட்டது. ஆய்வின் இறுதியில், ஹார்மோன் சிகிச்சையுடன் உடற்பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு, மற்றவர்களை விட அடிவயிற்று கொழுப்பு சேர்வது பெருமளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை தான் கொழுப்பு இடமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆரோக்கியமான முதுமைக்கான தற்காப்பு நடவடிக்கைகள்
வயதான காலத்தில் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று கூறி பட்டினி கிடப்பது அல்லது கடுமையான டயட் மேற்கொள்வது தசைகளை பலவீனப்படுத்தும். தசை இழப்பு ஏற்பட்டால் நடைப்பயிற்சி செய்வது கூட கடினமாகிவிடும். எனவே, எடையைக் குறைப்பதை விட கொழுப்பு எங்கு சேருகிறது என்பதைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. தினமும் தசைகளை வலுப்படுத்தும் மிதமான உடற்பயிற்சிகளைச் செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்ப்பது மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் ஹார்மோன் அளவுகளைச் சீராக வைத்திருப்பது அவசியம். இந்த புதிய ஆய்வு முறை, வயதான காலத்திலும் மக்கள் சுறுசுறுப்பாகவும் நோயின்றியும் வாழ ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.