Pregnancy Back Pain: கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி..?
Back Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முதுகுவலி பொதுவானது. ஹார்மோன் மாற்றங்கள், குழந்தையின் வளர்ச்சி, தவறான உடற்போக்கு ஆகியவை முக்கிய காரணங்கள். சரியான உடற்போக்கு, லேசான உடற்பயிற்சி, சூடான நீர் மசாஜ், கர்ப்ப பெல்ட் பயன்பாடு போன்றவை நிவாரணம் அளிக்கும்.

கர்ப்ப காலத்தில் (Pregnancy) ஒரு பெண்ணின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இந்த நேரத்தில், உடல் எடை அதிகரிக்க தொடங்கும், கருப்பையின் அளவு மற்றும் நிலை மாறும், முதுகெலும்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முதுகுவலி (Back Pain) என்பது பொதுவானதாகி விடுகிறது. இந்த நிலையான முதுகு வலி உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம், நடப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம், மன அழுத்தத்தை (Stress) அதிகரிக்கலாம். இந்த முதுகு வலி கடுமையாக இருந்தால், அது அன்றாட வழக்கத்தை பாதிக்கும். எனவே, தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்க, தாய் சரியான நேரத்தில் அதில் கவனம் செலுத்துவது முக்கியம்.
கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன..?
கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகரித்து வரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை முதுகெலும்பு மற்றும் முதுகு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, உடல் ரிலாக்சின் எனப்படும் ஹார்மோனை வெளியிடுகிறது. இது பிரசவத்திற்கு உடலை தயார்படுத்த தசைநார்கள் தளர்த்துகிறது. ஆனால் இது மூட்டுகளில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்பதால் வலியை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும்போது, வயிறு வெளிப்புறமாக வீங்கி, உடலின் சமநிலையை சீர்குலைத்து, கீழ் முதுகில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட நேரம் நிற்பதாலும், தவறான வழியில் உட்காருவதாலும் அல்லது கனமான பொருட்களைத் தூக்குவதாலும் முதுகு வலிவை அதிகரிக்கலாம்.




முதுகு வலியைத் தடுக்கும் வழிகள் என்ன?
முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற சரியான நிலையை பராமரிப்பது மிக முக்கியமான விஷயம். உட்காரும்போது உங்கள் முதுகை நேராக வைத்து, நாற்காலியில் முதுகை நன்றாக சாய்ந்து உட்காருவது சரியான முறையாகும். தூங்கும் போது தலையணையின் ஆதரவுடன் இடது பக்கத்தில் தூங்குவது நல்லது என்று கருதப்படுகிறது. இது இடுப்பில் அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான முதல் 3 மாதங்களுக்கு பிறகு, மெதுமெதுவாக யோகா மற்றும் நடைபயிற்சி போன்ற லேசான பயிற்சிகளை மேற்கொள்வது தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் முதுகு வலியைக் குறைக்கும்.
முதுகு வலி ஏற்படாமல் தடுப்பது எப்படி..?
- ஒரே நிலையில் அதிக நேரம் நிற்கவோ அல்லது உட்காரவோ வேண்டாம்.
- கர்ப்ப காலத்தில் வசதியான காலணிகளை அணியுங்கள்.
- சூடான நீரை கொண்டும் மசாஜ் செய்யுங்கள்.
- மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கர்ப்ப பெல்ட்களைப் பயன்படுத்தலாம். இது இடுப்புக்கு சப்போர்ட் வழங்குகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது தியானமும் நன்மை பயக்கும்.
- கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும்.
- உங்கள் முதுகை நேராக வைத்து உட்காருங்கள், குனிந்தபடி உட்கார வேண்டாம்
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.