நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!
Verdict Due in Dileep Assault Trial: இந்த வழக்கில் 251 சாட்சிகள் விசாரணைக்காக ஆஜரானது. தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ் பதிவுகள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு சாட்சி வாதங்களும் முன்வைக்கப்பட்டன. நடிகர் திலீப் இந்தச் சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை, திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளதாக கூறி வந்தார்.
கேரள திரைப்பட உலகையே அதிர்ச்சியூட்டிய பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், நடிகர் திலீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த விவகாரத்தை பல ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பை அறிவிக்கிறது. இந்த வழக்கு கேரள சினிமா துறையில் பெண்களின் பாதுகாப்பு, பணியிட ஒழுக்கம், தொழில்முறை மோதல்கள் குறித்து ஆழ்ந்த விவாதத்தை உருவாக்கியது. இதன் தாக்கம் பல ஆண்டுகளாக நீடித்ததால், இந்த தீர்ப்பு பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் பிரபலங்களின் சட்டபூர்வ பொறுப்பு, பெண்களின் பாதுகாப்பு என பல துறைகளில் புதிய முன்னுதாரணங்களை உருவாக்கும் என கருதப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை, கேரளா மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.
இதையும் படிங்க: சூர்யா சாருடன் படம் பண்ணவேண்டியதா இருந்தது.. ஆனால் – க்ரித்தி ஷெட்டி!
2017ல் நடந்த கொடூர சம்பவம்:
2017 பிப்ரவரி 17ஆம் தேதி, அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில் படப்பிடிப்பு முடித்து, தனியார் கேரவேனில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. நடிகை சென்ற கேரவேனை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல் வேனை நிறுத்தி, அதற்குள் நுழைந்து அந்த நடிகையை ஓடும் வேனில் 2 மணி நேரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதோடு, இந்த சம்பவத்தை வீடியோ காட்சிகளாக பதிவு செய்ததாகவும், அதை பயன்படுத்தி நடிகையை மிரட்ட முயன்றதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.




துணிச்சலாக புகார் அளித்த நடிகை:
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நடிகை துணிச்சலாக அளித்த புகாரின் அடிப்படையில், மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, முக்கிய குற்றவாளி சுனில் குமார் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். அதோடு, நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே முன்பு ஏற்பட்ட தொழில் தகராறு முன்விரோதம் காரணமாக, இந்த துன்புறுத்தலுக்கு ஏற்பாடு செய்ய சதி திட்டம் தீட்டியதாக போலீஸ் குற்றம் சாட்டியது. இதனால் திலீப் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 251 சாட்சிகள் விசாரணைக்காக ஆஜரானது. தொழில்நுட்ப சான்றுகள், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ் பதிவுகள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு சாட்சி வாதங்களும் முன்வைக்கப்பட்டன. நடிகர் திலீப் பலமுறை, இந்தச் சம்பவத்துக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளனர் எனக் கூறி வந்தார்.
இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு.. அட இந்த படத்திற்காகவா?
பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு:
தொடர்ந்து, ஆண்டுக்கணக்கில் இந்த வழக்கு விசாரணை நீண்டு வந்த நிலையில், கேரள சினிமா துறையில் பெண்களின் பாதுகாப்பு, பணியிட ஒழுக்கம், தொழில்முறை மோதல்கள் குறித்து ஆழ்ந்த விவாதத்தை உருவாக்கியது. இந்நிலையில், இன்று வெளியாக உள்ள தீர்ப்பை பாதிக்கப்பட்ட நடிகை உள்பட, கேரள திரைப்பட தொழிலாளர்கள், ரசிகர்கள், மகளிர் பாதுகாப்பு அமைப்புகள் என ஏராளமானோர் எதிர்நோக்கி உள்ளனர்.