Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை.. 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!

Kerala Actress Assualt Case Verdict Updates: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், நடிகர் திலீப்பை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பல்சர் சுனில் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை கேட்க திலீப் உட்பட பத்து குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை.. 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!
பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Dec 2025 12:21 PM IST

கேரளா, டிசம்பர் 08: நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், நடிகர் திலீப்பை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பல்சர் சுனில் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் நடிகர் திலீப் 8வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதோடு, சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு காரணமாக நடிகர் திலீப்புக்கு மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு.. அட இந்த படத்திற்காகவா?

நடிகைக்கு நேர்ந்தது என்ன?

மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி கேரவேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வேனை பின்தொடர்ந்து காரில் சென்ற ஒரு கும்பல், நடிகையின் வேனை இடைமறித்துள்ளனர்.

தொடர்ந்து, அவரது வேனில் அத்துமீறி புகுந்த அந்த கும்பல், சுமார் 2 மணி நேரமாக நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. அதோடு, வேனில் வளம் வந்தபடியே 2 மணி நேரமாக இந்த துன்புறுத்தல் சம்பவத்தை நிகழ்த்தியது. அத்துடன், நடிகையை மிரட்டுவதற்காக அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துணிச்சலாக புகார் அளித்த நடிகை:

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நடிகை துணிச்சலாக அளித்த புகாரின் அடிப்படையில், மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, அந்த நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீப்புக்கு, பல்சர் சுனில் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு முழுவதுமாக வேறு திசைக்கு திருப்பிய அந்த கடிதத்தால் மலையாள திரையுலகமே அதிர்ந்தது.

நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய திலீப்:

அதோடு, நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே முன்பு ஏற்பட்ட தொழில் தகராறு முன்விரோதம் காரணமாக, இந்த துன்புறுத்தலுக்கு ஏற்பாடு செய்ய சதி திட்டம் தீட்டியதாக போலீஸ் குற்றம் சாட்டியது. இதனால் திலீப் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 251 சாட்சிகள் விசாரணைக்காக ஆஜரானது. தொழில்நுட்ப சான்றுகள், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ் பதிவுகள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு சாட்சி வாதங்களும் முன்வைக்கப்பட்டன. நடிகர் திலீப் பலமுறை, இந்தச் சம்பவத்துக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளனர் எனக் கூறி வந்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் விடுதலை:

இவ்வழக்கில் நடிகர் திலீப் 8வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்தில் திலீப்புக்கும் தொடர்பு இருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தனர். அதோடு, வழக்கில் பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனில் உள்பட 8 பேரை கைது செய்திருந்தனர்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை.. ரசிகர்களை குஷிப்படுத்திய வா வாத்தியார் படக்குழு!

டிசம்பர் 12ம் தேதி தண்டனை விவரம்:

அதன்படி, பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஸ், சலீம், பரதீப் ஆகிய 6 பேரும் குற்றாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றாவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் டிசம்பர் 12ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திலீப் விடுதலையை எதிர்த்து கேரள நடிகைகள் கூட்டமைப்பு மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.