OTT Rewind: மிரள வைக்கும் திகில் திரைப்படம்.. கண்டிப்பாக பாருங்க!
2016ல் வெளியான லைட்ஸ் அவுட் என்ற திகில் படம் டேவிட் எஃப். சாண்ட்பெர்க் இயக்கியது. இருட்டில் மட்டுமே தோன்றும் ஒரு அமானுஷ்ய உருவத்தின் கதை இதுவாகும். ஒரு குடும்பத்தின் மீது ஏற்படும் திகில் அனுபவங்கள், அவர்களின் போராட்டம் தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

Lights Out படம்
பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் பேய் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதே பேய், அதே கதை, ஆனால் அடுத்த பாகம் என வெளியானாலும் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதில் ஒரு அலாதி எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு Lights Out படம் பற்றி நாம் காணலாம். இந்த படம் டேவிட் எஃப். சாண்ட்பெர்க் இயக்கிய முதல் திரைப்படமாக அமைந்தது. எரிக் ஹெய்செரர் கதையை எழுதிய நிலையில் இயக்குநர் சாண்ட்பெர்க் 2013ம் ஆண்டு அதே பெயரில் எடுத்த குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியானது. Lights Out படத்தில் தெரசா பால்மர், கேப்ரியல் பேட்மேன், அலெக்சாண்டர் டிபெர்சியா,பில்லி பர்க்,மரியா பெல்லோ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மார்க் ஸ்பைசர் ஒளிப்பதிவு செய்த நிலையில் பெஞ்சமின் வால்ஃபிஷ் இசையமைத்திருந்தார்.
மிரள வைக்கும் கதை
லாஸ் ஏஞ்சல்ஸ் இருக்கும் ஆடை குடோனில் படத்தின் கதை தொடங்குகிறது. அங்கிருக்கும் ஒரு ஊழியர் இருட்டில் மட்டுமே தெரியும் ஒரு அமானுஷ்ய உருவத்தைக் காண்கிறார். அடுத்த சில நொடிகளில் விளக்குகள் அணைந்தவுடன் அவரது முதலாளி கொல்லப்படுகிறார். இறந்தவரின் மனைவியான சோஃபி இருட்டில் ஒரு கண்ணுக்குத் தெரியாத உருவத்துடன் பேசுவதை மகன் மார்ட்டின் காண்கிறான். அப்பா இறந்ததால் அம்மா இப்படி நடந்துக் கொள்வதாக நினைத்து மூத்த சகோதரி ரெபேக்காவை அழைக்கிறான், சோஃபி தன் மகளுடன் அவரது வீட்டுக்கு செல்கிறார்.
இங்கிருந்து பிளாஷ்பேக் காட்சி தொடங்குகிறது. சோஃபிக்கு சிறு வயதில் டயானா என்ற தோழி இருந்ததாகவும், அவள் ஒரு அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் டயானாவுக்கு மற்றவர்கள் மீது தீய எண்ணம் ஏற்படுகிறது. ஒளி அடிப்படையிலான சிகிச்சை பலனளிக்காமல் அவள் இறந்து விட்ட நிலையில் தற்போது அவளுடைய ஆவி உலா வருவதாக சோஃபி தெரிவிக்கிறார்.
வீட்டில் லைட்டை அணைத்தால் பேய் வந்து விடும் என்ற நிலையில் ரெபேக்கா குடும்பத்தினர் எப்படி அந்த பேயை அங்கிருந்து விரட்டுகிறார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
படத்தின் சிறப்புகள்
Nothing good happens when the lights go out… #LightsOut, in theaters Friday. https://t.co/x4sn19sPXv pic.twitter.com/xP08s4f3Sv
— Lights Out (@LightsOutMovie) July 21, 2016
திரைப்படப் போட்டிக்காக லைட்ஸ் அவுட் என்ற குறும்படத்தை உருவாக்கி பின்னாளில் அது திரைப்படமாக எடுக்கப்படும் என தான் எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும் தொடக்கத்தில் மனநோயை கருத்தாக கொண்டு கதை எழுதப்பட்ட நிலையில், பின்னர் அது அமானுஷ்ய சக்தி கொண்ட படமாக மாற்றப்பட்டது. இயக்குநர் சாண்ட்பெர்க்கிற்கு இது முதல் படம் என்பதால் அவர் உதவி இயக்குநரிடம் எப்போது ஆக்ஷன் சொல்ல வேண்டும் என ஷூட்டிங்கி கேட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இருந்தாலும் படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. வசூலிலும் சாதனைப் படைத்த இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Lights Out படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.