‘சர்ச்சை கேள்வி’.. தனியாளாக சண்டை செய்து யூடியூபரை வெளுத்து வாங்கிய நடிகை கெளரி கிஷன்!!

Gauri Kishan: அநாகரீகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவருடன் நடிகை கெளரி கிஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? இது கேள்வியும் அல்ல, நீங்கள் பத்திரிகையாளரும் அல்ல, உங்கள் துறைக்கே அவமானம் கொடுக்கிறீர்கள் என்று அவர் வெடித்துள்ளார்.

‘சர்ச்சை கேள்வி’.. தனியாளாக சண்டை செய்து யூடியூபரை வெளுத்து வாங்கிய நடிகை கெளரி கிஷன்!!

கெளரி கிஷன்

Updated On: 

07 Nov 2025 09:44 AM

 IST

சென்னை, நவம்பர் 07: அநாகரீகமான கேள்வி கேட்ட யூடியூபருக்கு நடிகை கெளரி கிஷன் (Gauri Kishan) துணிச்சலாக பதிலடி கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. தமிழில் 96 திரைப்படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். அதன்பின், மாஸ்டர், கர்ணன் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகி, துணை கதாநாயகி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘LIK’ படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில், தற்போது புதுமுகம் ஆதித்ய மாதவன், கெளரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் இன்று (நவ.07)  திரைக்கு வருகிறது. இதையொட்டி, கடந்த அக்டோபர் 30ம் தேதி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஒரு யூட்யூபர் கேட்ட கேள்வி இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Also read: Ajith Kumar: என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. எனது பேட்டிகளை தவறாக சித்தரிப்பாதை நிறுத்துங்கள்- அஜித் குமார்!

யூட்யூபரின் அநாகரீக கேள்வி:

அந்த செய்தியாளர் சந்திப்பில் யூடியூபர் ஒருவர், இந்தப் படத்தின் பாடலில் ஹீரோயினை தூக்கினீர்களே, அவர் எவ்வளவு எடை இருந்தார்? எனக் கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் நிறைய உடற்பயிற்சி செய்வதால், எனக்கு அவர் வெயிட்டாக தெரியவில்லை எனக்கூறி கடந்துச் சென்றார். அப்போது, படத்தின் கதாநாயகி கெளரி கிஷனும் அருகில் இருந்துள்ளார். எனினும், அவர் அப்போது அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதெல்லாம் ஒரு எல்லாம் கேள்வியா?:

இதனிடையே, நேற்றைய தினம் படம் சார்ந்த ஒரு பேட்டி நிகழ்ந்தது. அப்போது, அந்த யூடியூபரிடம் கெளரி கிஷன், அன்று கேள்வி கேட்டதை நினைவில் வைத்து எதற்காக அவ்வாறு கேள்வி கேட்டீர்கள் என கோபமடைந்தார். அதோடு, “என்னுடைய உடல் எடை குறித்து தனிப்பட்ட கேள்விகளை கேட்பது தவறு. என் உடல் எடையைத் தெரிந்து வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? உடல் ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? நான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அதைப் பற்றி கேளுங்கள்” என்றார்.

அப்போது அந்த யூடியூபர், “வெயிட் என்ன என்றுதானே கேட்டேன்” அதில் என்ன இருக்கிறது? என நியாயமற்ற முறையில் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு கெளரி கிஷன், நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோ கிட்ட என்னோட வெயிட் என்னனு முட்டாள்தனமாக கேட்குறீங்க. அன்று நீங்கள் அந்த கேள்வியை கேட்டபோது, அதனை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. அதனால் அப்போது என்னால் அதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை என்றார்.

உங்களிடம் வேறு என்ன கேள்வி எழுப்ப முடியும்?:

மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் உடல் மீதான உரிமை அவருக்கு உண்டு. என்னுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியும்? என்றார். அவரது ஆதங்கத்தை பொருட்படுத்தாத அந்த யூடியூபர், நீங்கள் பூசுனதுபோல் இருந்ததால் அவ்வாறு கேட்டேன் என்றும், தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும் எனவும் அவர் . உங்களிடம் மோடியைப் பற்றியா கேள்வி எழுப்ப முடியும்? குஷ்பு, சரிதா போன்ற பல நடிகைகள் இதே கேள்வியை எதிர்கொண்டவர்கள் என்று தன் கேள்வியை நியாயப்படுத்தினார்.

Also read: D 54 படப்பிடிப்பில் நடிகர் தனுஷ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதற்கு கெளரி கிஷன், ஹீரோக்களைப் பார்த்து யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கடும் ஆதங்கத்துடன் பேசினார். எனினும், அவரை பேசவிடாத அந்த யூடியூபர், கௌரி கிஷனையே மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மன்னிப்பு கேட்க முடியாது:

அதனை பொருட்படுத்தாத கெளரி கிஷன், நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன் என மேலும் துணிச்சலுடன் பேசி அரங்கையே அதிர வைத்தார். அதோடு, விடாத கெளரி கிஷன், இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன் என்று ஆதங்கப்பட்டார்.

இணையத்தில் பெருகும் ஆதரவு:


இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.  அதோடு, நடிகை கெளரி கிஷனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில்,  பாடகி சின்மயி,  ‘இவ்வளவு இளம் வயதில் ஒருவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பின்வாங்காமல் இருந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.