Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் புதுப்பேட்டை படம்!

தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்கள் பல வெளியாகி இருந்தாலும் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் புதுப்பேட்டை படம்!
புதுப்பேட்டைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2025 14:42 PM

இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan) இயக்கத்தில் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இதில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகைகள் சினேகா மற்றும் சோனியா அகர்வால் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அழகன் பெருமாள், விஜய் சேதுபதி, பாலா சிங், பிருத்விராஜ், நித்திஷ் வீரா, முன்னார் ரமேஷ், தென்னவன், ஆடுகளம் முருகதாஸ், சாய் தீனா ஜெய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஒரு நாளில், புல் பேசும், வரியா மற்றும் எங்க ஏரியா பாடல்கள் அனைத்தையும் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படம் திரையரங்குகளில் வெளியான போது இப்படி குறைவான உடல் எடையுடன் உள்ள தனுஷ் பெரிய ரௌடியா என்று கிண்டல் செய்தவர்களும் உண்டு. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் கேங்ஸ்டர் படங்களுக்கு கல்ட் சினிமா புதுப்பேட்டை என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்தின் கதை என்ன?

நடிகர் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே தனது தாயை அவரது அப்பாவே கொலை செய்துவிடுவதைப் பார்த்து புதுப்பேட்டை என்கிற ஊரில் இருந்து ஓடி விடுகிறார். பிறகு பசியில் என்ன செய்வது என்று தெரியாத தனுஷ் பிச்சை எடுக்கவும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் தவறுதலாக போலீசார் கொக்கி குமாரை கைது செய்கின்றனர். அங்கு மணி என்பவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் அன்பு என்ற பெரிய கேங்ஸ்டர் உடன் வேலை செய்து வருகிறார். கொக்கி குமாரும் அன்பு கேங்கில் இணைந்து சின்ன சின்ன அசைன்மெண்டுகளை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் பெரிய கொலை ஒன்றை செய்து அன்பு கேங்கில் முக்கியமான புள்ளியாக மாறுகிறார் கொக்கி குமார். இந்த நிலையில் அன்புவிற்கு கீழ் விபச்சார தொழிலில் ஈடுபடும் கிருஷ்ணவேணி (சினேகா) மீது கொக்கி குமாருக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் அன்புவிடம் அவளை அந்த தொழில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கேட்க பேச்சுவார்த்தை முற்றி கோக்கி குமார் அன்புவை கொலை செய்துவிடுகிறார்.

அதன் பிறகு அன்புவின் மொத்த வேலைகளையும் கொக்கி குமாருக்கு கொடுக்கப்படுகிறது. அடிதடி கட்டப் பஞ்சாயத்தில் இருந்து அரசியலில் குதித்தால் தான் உயிருடன் இருக்க முடியும் என்று நினைக்கும் கொக்கி குமார் தனக்கு வேலை கொடுக்கும் அரசியல் தலைவர் தமிழ் செல்வனிடம் எம்.எல்.ஏ சீட் கேட்க செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

தமிழ் சினிமாவின் கல்ட் புதுப்பேட்டை:

புதுப்பேட்டை படம் வெளியான போது கொண்டாடத மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான படம் தமிழ் சினிமாவில் இல்லை என்றும் இதனை தமிழ் சினிமாவின் கல்ட் என்றும் கொண்டாடி வருகின்றனர். மேலும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்றும் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனிடம் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான புதுப்பேட்டை படம் இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.