புஷ்பா படத்திற்கு பிறகு எல்லோருக்கும் இப்போது என் முகம் தெரியும் – நடிகர் அல்லு அர்ஜுன் பேச்சு
Actor Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குநர் அட்லி உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் புஷ்பா 2: தி ரூல். இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரன் இயக்கி இருந்தார். இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா (Actress Rashmika Mandanna) நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிகழ்வு படத்தின் வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அல்லு அர்ஜுன் வியாழக்கிழமை 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அன்று WAVES 2025-ல் கலந்துகொண்ட அவர் இந்திய சினிமா வலுவடைந்து வருவதாகவும், விரைவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய முத்திரையைப் பதிக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து இந்திய சினிமாவின் படைப்பு எல்லைகளைத் தள்ளி இந்திய திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய சினிமா ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிப் பேசுகையில், எங்களிடம் இவ்வளவு பெரிய திரைப்படத் துறை உள்ளது, நாங்கள் பல தசாப்தங்களாக அங்கு இருக்கிறோம். ஆனால் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நாங்கள் ஒருபோதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா அந்த இடத்தை அடைகிறது. ஒரு நாடாக நாங்கள் வளர்ந்து வருகிறோம், வரும் ஆண்டுகளில், இந்திய திரைப்படத் துறை உலகளாவிய முத்திரையைப் பதிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது சினிமா வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பற்றி அல்லு அர்ஜுன் பேசியபோது, ஒரு காலத்தில் தன்னை ஒரு பிராந்திய நடிகராகக் கருதியிருந்தாலும், புஷ்பா தொடரின் வெற்றி அதை மாற்றிவிட்டது என்று கூறினார். தெலுங்கு சினிமா மற்றும் பிற தென் மாநிலங்களில் ஏற்கனவே நன்கு அறியப்பட்டிருந்தாலும், புஷ்பா தன்னை பரந்த தேசிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக அவர் பகிர்ந்து கொண்டார்.
குறைந்த பட்சம் இப்போது என் முகம் அனைவருக்கும் தெரியும். நான் தெற்கின் பிற மாநிலங்களில் மிகவும் பிரபலமான தெலுங்கு படங்களில் பணியாற்றினேன், ஆனால் இப்போது புஷ்பா’ மற்றும் முழு இந்திய பார்வையாளர்களின் கருணையால் நான் இன்னும் பரிச்சயமாகிவிட்டேன். எனவே இது ஒரு நீண்ட பயணம், இந்த பயணத்தைத் தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.