TVK Conference: மதுரை தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!
Tamilaga Vettri Kazhagam Madurai Conference : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு இரண்டாவது கடிதம் எழுதி, மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்.

விஜய்
தமிழ்நாடு, ஆகஸ்ட் 18: தமிழக வெற்றி கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் (Thalapathy Vijay) இரண்டாவது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான தமிழக வெற்றி கழகத்தின் மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் விரைவில் தேர்தல் அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட போகிறது. நம் கனவு நனவாக புரட்டிப் போட போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே இருக்கிறது. 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் வெற்றி விளைவுகளை 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணவிருக்கிறோம். இந்த திருப்புமுனை தருணம் நிகழப்போவது நிச்சயமாகும்.
விஜய் வெளியிட்ட பதிவு
— TVK Vijay (@TVKVijayHQ) August 18, 2025
இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து தினமும் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறிய போகின்றனர். தமிழக மக்களை உயிரென போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் உங்கள் மீதான அக்கறை மற்றும் உள்ளன்புன் காரணமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதன்படி கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பள்ளி சிறுவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடி நேரலை கண்டு மகிழ வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Also Read: TVK Vijay : சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. நேரில் வரவழைத்து சந்தித்த விஜய்
இரண்டு கைகளை விரித்து காத்திருப்பேன்
மாநாட்டுக்கு வரும்போதும் நிறைவடைந்து ஊர் திரும்பும் போதும் கழகத் தோழர்கள் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவ கட்டுப்பாடுடன் கடைபிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தகுதியும் பொறுப்பு மிக்க ஒரு அரசியல் பேரியக்கம் என்பதை ஒவ்வொரு செயலிலும் நாம் காட்ட வேண்டிய தலையாய கடமை உள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில் இதயம் திரண்டு இரண்டு கைகளை விரித்து காத்திருப்பேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பேசப்போவது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இப்படியான நிலையில் அரசியல் ரீதியாக திமுகவையும், கொள்கை ரீதியாக பாஜகவையும் விஜய் விமர்சித்து வருகிறார். அப்படியான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னெடுப்பாக இந்த மதுரை மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.