Velachery Constituency Election 2026: வேகமாக வளர்ந்து வரும் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
Tamil Nadu Elections 2026: வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஹசான் மௌலானா கிட்டத்தட்ட 68,493 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் எம். கே. அசோக் 64,541 வாக்குகள் பெற்றிருந்தார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 7, 2026: வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி என்பது சென்னையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதி ஆகும். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருக்கக்கூடிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி என்பது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நகர்ப்புறத் தொகுதியாகும். வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் இந்த சட்டமன்றத் தொகுதியில் அடங்குகின்றன. இங்கு ஐ.டி. பார்க், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளச்சரி சட்டமன்ற தொகுதி:
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஹசான் மௌலானா கிட்டத்தட்ட 68,493 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் எம். கே. அசோக் 64,541 வாக்குகள் பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மையமும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியைப் பொருத்தவரையில், அதிமுக மற்றும் திமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவருக்கும் வெற்றி வாய்ப்புகள் சுமார் 50 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக தலைமைக்கு அடுத்த சிக்கல்… பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் 4 சுயேட்சை வேட்பாளர்கள்!
தொகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள்:
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு. ஒவ்வொரு பருவமழை காலத்திலும், வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மழைநீரால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குடியிருப்புகள் முதல் சாலைகள் வரை அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே சமயத்தில், அலுவலக நேரங்களில் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
வரும் தேர்தலில் களம் யாருக்கு சாதகம்:
2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசான் மௌலானாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக தரப்பிலும் மீண்டும் எம். கே. அசோக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி தரப்பில் கீர்த்தனா மற்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் ஆர். குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தவரையில், அதிமுக மற்றும் திமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில், புதிதாக களம் இறங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கணிசமான வாக்குகளை பிரிக்கும் என அரசியல் வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.