தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் அதிரடி கடிதம்!
Extend Voting Time: தமிழகத்தில் நிலவும் கடும் போக்குவரத்து தட்டுப்பாட்டினால் வாக்காளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டு, வாக்குப்பதிவு நேரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மிக முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் தவிக்கும் மக்களுக்காக வாக்குப்பதிவு நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுவதை அவர் தனது கடிதத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
போக்குவரத்துத் துறையின் மெத்தனப் போக்கு குறித்த குற்றச்சாட்டு
மாநில போக்குவரத்து கழகம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் சரியாகத் திட்டமிடவில்லை என்று விஜய் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் போன்ற பிரதான பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். “வாக்களிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் தமிழகம் வந்துள்ள மக்களுக்கு, அவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லத் தேவையான பேருந்து வசதிகளைச் செய்து கொடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏதோ நிர்வாக ரீதியான சிறு தவறு கிடையாது, மாறாக மக்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுமா? விஜய் கடிதம்..!
Vijay, TVK chief and candidate from Tiruchirappalli East and Perambur constituencies, writes a letter to the Chief Election Commissioner to extend polling hours by two hours till 8:00 pm.
“Extend polling hours by two hours: In view of the large surge of delayed voters due to… pic.twitter.com/PFREoC4L3i
— ANI (@ANI) April 23, 2026
வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க வலியுறுத்தல்
இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று விஜய் கோரியுள்ளார். பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் வாக்காளர்கள் உரிய நேரத்திற்குத் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, வாக்குப்பதிவு நேரத்தையும் இரண்டு மணி நேரம் அதிகரித்து, மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு
தேர்தல் ஆணையத்திற்கு வைக்கப்பட்ட மூன்று முக்கிய கோரிக்கைகள்
தன்னுடைய கடிதத்தில் மூன்று பிரதான கோரிக்கைகளை விஜய் முன்வைத்துள்ளார். முதலாவதாக, பேருந்து நிலையங்களிலிருந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அவசரகால சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் மற்றும் இது குறித்த தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுவதைத் தவிர்க்க மேற்பார்வையாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவதாக, போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்காக வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.