ஒரு முறை உங்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுங்கள்.. கையெடுத்து கும்பிட்ட தவெக தலைவர்..
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகும் தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. மக்களை முறையாக கவனிக்காத ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது. எத்தனை பொய்யான வாக்குறுதிகள் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். ஆனால் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவில்லை.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 21, 2026: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களாக மாவட்டம் தோறும் சென்று கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டு மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடைசி நாளான இன்று, சென்னை நந்தனம் பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
நந்தனம் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய்:
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகும் தேர்தலின் கடைசி பிரச்சாரம் இது. மக்களை முறையாக கவனிக்காத ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது.
எத்தனை பொய்யான வாக்குறுதிகள் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். ஆனால் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவில்லை. வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. விலைவாசியும் உயர்ந்துள்ளது. மக்களின் சுமை மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை எந்த அரசும் பெறாத அளவிற்கு கடன் பெற்றுள்ளனர். அந்த கடனின் சுமையும் மக்கள்மீது அதிகரித்துள்ளது. இத்தனை லட்சக் கோடி கடன் பெற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
மேலும் படிக்க: நிறைவுபெறும் தேர்தல் பிரச்சாரம்.. மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்..
தமிழகத்திலும் 90% மேல் வாக்குப்பதிவு இருக்கும்:
சமீபத்தில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 40 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் மட்டுமே எனக்கு வாக்களிப்பார்கள் என்பது தவறு. 50 வயதிற்குக் கீழே உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடி 65 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
புதுச்சேரியில் 90%க்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் 90%க்கு மேல் வாக்குப்பதிவு நடைபெறும் என நம்புகிறேன். எனவே, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக விசில் சின்னத்தில் வாக்களித்து உங்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தவெகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்:
நான் ஒரு நடிகன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் நான் நடிக்கவில்லை. அரசியலில் இருப்பவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். ஊழலில் ஊறியுள்ள திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக நல்லாட்சியை வழங்க தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல்” என பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த அவர், “ஒரே தொகுதியில் மட்டும் அல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.