சாதாரண வார்த்தை கூட பேச தடுமாறிய விஜய்.. சொன்ன விளக்கம் என்ன?
TVK Leader Vijay Speech: நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய தவெக தலைவர் விஜய் பல இடங்களில் தடுமாறினார். இதற்கு விளக்கம் அளித்த அவர், “ நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்-பின் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த ரிதமைக் பிடிக்க சற்று நேரம் ஆகிவிட்டது” என தெரிவித்தார்.

விஜய் பிரச்சாரம்
நாமக்கல், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பல இடங்களில் தடுமாறினார், பின்னர் அதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றார். அந்த வகையில் செப்டம்பர் 13, 2025 அன்று தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது சனிக்கிழமை ஆன இன்று, அதாவது செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் சொன்னது என்ன?
இதற்காக சென்னை இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்ததால், பல மணி நேர தாமதத்திற்கு பின் பிரச்சார இடத்திற்கு சென்றடைந்தார். பின்னர் மக்களிடையே உரையாற்றிய தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து, “வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: நடைமுறைக்கு சாத்தியமானது மட்டும் தான் சொல்வோம் – செய்வோம்.. நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்
அதே சமயம் “அதிமுக, பாஜக மற்றும் திமுக போல் தமிழக வெற்றி கழகம் இருக்காது” என்றும் தெரிவித்திருந்தார். குறிப்பாக “அதிமுக மற்றும் பாஜக நேரடி உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாஜக மறைமுகமாக திமுகவுடன் உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார். எனவே “வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்பது என்பது, பாஜகவிற்கு மறைமுகமாக ஓட்டு போடுவதற்கு சமம்” என்றும் தெரிவித்தார்.
உரையின்போது ஏற்பட்ட தடுமாற்றம்:
உரையாற்றியபோது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சில இடங்களில் தடுமாறினார். தனது உரை தொடங்கும்போது சாதாரண வார்த்தைகளிலும் தவறினார். உதாரணமாக “சென்னை மாகாணம்” என சொல்ல வேண்டிய இடத்தில் “மகாணம்…” என தவறினார். “பிற்படுத்தப்பட்ட ” என்பதற்குப் பதிலாக “அமைக்கணும்” என கூறினார். “நிலையங்கள்” என்பதற்கு பதிலாக “திளையங்கள்” என உச்சரித்தார்.
மேலும் படிக்க: என் மீது இவ்வளவு நம்பிக்கையா? ஒருகை பாத்திடலாம் – கான்ஃபிடெண்டாக சொன்ன விஜய்..
விஜய் கொடுத்த விளக்கம்:
இந்தப் பிழைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளானது. கடைசியாக தனது உரையை முடித்த விஜய், இதற்கு விளக்கம் அளித்தார்: “சாரி… நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்-பின் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த ரிதமைக் (rhythm) பிடிக்க சற்று நேரம் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த தடுமாற்றம். நன்றி.” என பேசினார்.