கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு – த.வெ.க தலைவர் விஜய் உறுதி..
TVK Conference Vijay Speech: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், ” 2026 நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் அதனை சொல்லும் மாநாடு தான் இந்த இரண்டாவது மாநாடு. மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ” என பேசியுள்ளார்.

மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், “ சிங்கம் கர்ஜித்தால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை அதிரும். சிங்கத்தைப் பொருத்தவரையில் அது இறந்த ஒரு விரையை ஒருபோதும் சாப்பிடாது. சிங்கம் வேட்டைக்காக மட்டுமே வெளியே வரும்; சும்மா அலட்டலுக்காக வெளியே வராது.
சிங்கம் தனியாக வந்தாலும் கெத்தாகவே வரும். சிங்கம் எப்போதும் சிங்கமாக மட்டுமே இருக்கும். ஒரே ஒரு சிங்கம்தான் இருக்க முடியும். மதுரை என்றாலே நினைவுக்கு வருபவர்கள் — யாருக்கும் அடங்காமல் துள்ளி குதித்து ஓடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம், மீனாட்சி அம்மன் — உணர்வுபூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் அப்படித்தான் உணர்வுபூர்வமாக இருப்பவர்கள்.
2026-ல் நிச்சயம் மாற்றம் ஏற்படும்:
ஆனால் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன், ஒரே ஒரு பெயர்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அது எம்.ஜி.ஆர் போன்ற குணத்தை கொண்ட கேப்டன் விஜயகாந்த். அவருடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான். அவரை எப்படி நான் மறக்க முடியும்? 2026 நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் அதனை சொல்லும் மாநாடு தான் இந்த இரண்டாவது மாநாடு” என பேசியுள்ளார்.
மேலும், “ முதலில் “கட்சி தொடங்க மாட்டார்” என்றார்கள். பின்னர் “மாநாடு எல்லாம் நடத்த முடியாது” என்றார்கள். அதைத் தொடர்ந்து தற்போது “இது ஓட்டாக மாறாது, ஆட்சி பிடிக்க முடியாது” என்கிறார்கள். ஆட்சியை பிடித்து காட்டவா? பெண்கள், பெண்கள் பாதுகாப்பு, முதியவர்கள், இளைஞர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் — இவர்கள்தான் நமது முக்கியத்துவம்.
அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல இது:
அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல இது. இது கொள்கை, கோட்பாடுகளுடன் தொடங்கப்பட்ட கட்சி. நம் ஒரே கொள்கை எதிரி பாஜகதான்; ஒரே அரசியல் எதிரி திமுகதான்.
“டீல் பேசி ஊரை ஏமாற்றும் கட்சி அல்ல” — மாபெரும் பெண்கள் சக்தியும், இளைஞர்கள் சக்தியும், மக்கள் சக்தியும் நம்முடன் இருக்கிறார்கள். எல்லோரும் நம்முடன் இருக்கும் போது, எதற்கு இந்த பாசிச பாஜகவுடன் நேர்முக அல்லது மறைமுக கூட்டணி?
அடிமை கூட்டணியில் சேர என்ன அவசியம்?
நாம் யார் தெரியுமா? இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை. அடிமை கூட்டணியில் சேர நமக்கு என்ன அவசியம்? நம்முடைய கூட்டணி, சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.
நம்மை நம்பி வருபவர்களுக்கு, ஆட்சியிலும் அதிகாரத்திலும் நிச்சயம் பங்கு கிடைக்கும். 2026-ல் இரண்டே இரண்டு பேருக்குத்தான் போட்டி இருக்கும். ஒன்று — தமிழக வெற்றி கழகம். மற்றொன்று — திமுக. இந்த போட்டி எப்படி இருக்கப் போகிறது என்றால், “கூட்டணியால் நாம் வெல்லலாம்” என்ற கனவு, ஒருநாளும் வெல்லாது!”