திமுகவுக்கு ஏடிஎமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் – கரூரில் மறைமுகமாக விமர்சனம் செய்த விஜய்..
TVK Vijay Campaign At Karur: கரூர் மாவட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “ திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி தற்போது என்னவாக இருக்கிறார் தெரியுமா? — திமுக குடும்பம் ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் விநியோகிக்கும் ‘ATM மெஷின்’ ஆக செந்தில் பாலாஜி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்!” என தெரிவித்துள்ளார்

கரூரில் விஜய் பிரச்சாரம்
கரூர், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றடைந்தார். நாமக்கல்லில் பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுக, அதிமுக மற்றும் பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், “2026 தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். நம்பிக்கையோடு இருங்கள்!” எனக் கூறினார்.
கரூரில் விஜய் பிரச்சாரம்:
மாலை ஏழு மணியளவில் கரூர் மாவட்டத்திற்கு சென்றடைந்த விஜய், அங்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரைப் பற்றி பெருமையாக சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சமீப நாட்களாக இந்தியாவிலேயே ‘கரூர்’ என்று சொன்னாலே ஒரு பெயர் தான் பிரபலமானது. அதற்கு யார் காரணம் என்று சொல்லித் தெரிய தேவையில்லை.
கரூர் மாவட்டத்தில் ‘பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம்’ என்று சொன்னார்கள். ஆனால் பேரிச்சை மரம் கூட வேண்டாம் — பேரிச்சை விதைகளையாவது இவர்கள் கண்ணில் காட்டினார்களா?
மேலும் படிக்க: மனநோயாளியாக மாறிய சீமான்.. அண்ணா குறித்து அவதூறு பேச்சுக்கு சீமான் மீது குவியும் கண்டனங்கள்..
கரூரின் முக்கிய பிரச்சனையின் காரணமான ஒருவரைப் பற்றி பேசாமல் போனால் நல்லா இருக்காது…” (என்று கூறி “பாட்டிலுக்கு 10 ரூபா…” என்ற பாடலை பாடி கிண்டல் செய்தார்.) “கரூரில் மந்திரியாக இருந்தவர் இப்போது மந்திரி இல்ல. ஆனாலும் மந்திரி மாதிரி செயல்படுகிறார்!”
“சமீபத்தில் கரூரில் நடைபெற்ற ‘30 பேர் விழா… மன்னிக்கணும், முப்பெரும் விழா’வில் முதலமைச்சர் மாஜி மந்திரியை பெருமையாக பேசியதை நாம் கேட்டோம். ஆனால் இதே முதலமைச்சர் கரூருக்கு எதிர்க்கட்சித் தலைவராக வந்தபோது மாஜி மந்திரி குறித்து என்ன பேசினார் என்பதை யாரும் Fact Check செய்ய தேவையில்லை — யூடியூப் திறந்தாலே தெரியும்!”
மேலும் படிக்க: 9 மணி நேரம் தான் டிராவல்.. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்.. எப்போது தெரியுமா?
திமுகவுக்கு ஏடிஎமாக செயல்படும் முன்னாள் அமைச்சர்:
“திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி தற்போது என்னவாக இருக்கிறார் தெரியுமா? — திமுக குடும்பம் ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் விநியோகிக்கும் ‘ATM மெஷின்’ ஆக செந்தில் பாலாஜி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்! காவல்துறையின் கைகள் இங்கு கட்டப்பட்டுள்ளது. மக்கள்தான் எஜமானர்கள் — அவர்களுக்குத்தான் பயப்பட வேண்டும்! இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சியும் மாறும், அதிகாரமும் கைமாறும்… மக்களுக்கான மக்களாட்சி அமையும்! அப்போது யாருக்கு என்ன என்று தெரியும்! நம்பிக்கையோடு இருங்கள்… நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்!” என பேசியுள்ளார்.