சென்னை, மார்ச் 30, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில், இன்று அவர் மனுவை தாக்கல் செய்துள்ளார். பொதுவாக வேட்புமனுவில் ஒருவரின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இடம்பெறும். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 404.58 கோடி அசையும் சொத்து:
இதன்படி, விஜய்க்கு ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் ரூ.220.15 கோடி மதிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜயின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விஜயின் மனைவியிடம் சுமார் ரூ.4.07 கோடி மதிப்பில் 3,122 கிராம் தங்கமும், ரூ.1 கோடி மதிப்பிலான 134 கேரட் வைரமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் மகன் மற்றும் மகள் வங்கி கணக்குகளில் ரூ.4 லட்சம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனைவி சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்து:
விஜயின் பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.21.83 கோடி ஆகும். அவரது வங்கி கணக்கில் தற்போது ரூ.220 கோடி இருப்பதாகவும், அவரது மனைவி சங்கீதாவின் வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் கையில் ரூ.2 லட்சம் ரொக்கமாக இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் மட்டும் விஜய்க்கு சுமார் ரூ.184 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வைத்திருக்கும் கார்கள் மொத்த மதிப்பு ரூ.7.45 கோடி ஆகும்.
மொத்த வருமானம் எவ்வளவு?
மேலும், விஜயிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளது. அவரது மனைவியிடம் 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாகவும், ரூ.1 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் விஜயின் மொத்த வருமானம் ரூ.734.45 கோடி என்றும், பல்வேறு தனிநபர்களுக்கு விஜய் சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளதாகவும் அந்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.