யார் இலவசங்களை கேட்டது? படித்தவர்களுக்கு வேலைதானே கொடுக்க வேண்டும்? சீமான் ஆதங்கம்!!
Tamilnadu Assembly Election: இளைஞர்கள் மது குடித்துவிட்டு தங்கள் வேலையை இழக்கின்றனர். இதனால் வடமாநிலத்தை சேர்ந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்கும் கிடைத்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து இலங்கையை போன்று தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டால் எங்கே செல்வது?

சீமான்
Tamilnadu Polls 2026: இலவசத் திட்டங்கள் அறிவித்த கட்சிகள் பற்றி சீமான் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து வேதனையுடன் சிரித்துக்கொள்கிறேன். ரூ.8 ஆயிரத்துக்கு டோக்கன் தருகிறேன், எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் என்கின்றனர். பல கட்சியினரும் பணம் தருகிறோம் என்றும், படித்து முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் தருகிறோம் என்றும் கூறுகிறார்கள். படித்தவர்களுக்கு வேலைதானே கொடுக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
யார் இலவசங்களை கேட்டது?
சாராய கடைகளை மூடுவேன் என்று எந்த கட்சியும் கூறுவதில்லையே ஏன்?. தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. பட்ஜெட்டில் பற்றாக்குறையை காட்டுகிறார்கள். அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.20 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும். ரூ.2 லட்சம் கோடி வட்டிகட்ட வேண்டும். கடனை வாங்கி நிறைவேற்றிய எந்த திட்டமாவது நன்றாக இருக்கிறதா? யார் இலவசங்களை கேட்டது? எங்கே கொண்டுபோய் இந்த மக்களை நிறுத்தப் போகிறார்களோ? என்றும் வேதனை தெரிவித்தார்.
மதுவால் சீரழியும் இளைஞர்கள்:
மதுவினால் தமிழகத்தில்தான் அதிக இளம் விதவைகள் உள்ளனர். இளைஞர்கள் மது குடித்துவிட்டு தங்கள் வேலையை இழக்கின்றனர். இதனால் வடமாநிலத்தை சேர்ந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்கும் கிடைத்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து இலங்கையை போன்று தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டால் எங்கே செல்வது?
என் காரில் சோதனை:
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று நான் கூறிவருகிறேன். இருப்பினும் எனது காரை மறித்து சோதனை செய்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களின் காரை மறிப்பது கிடையாது. விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், ஆஸ்பத்திரிக்கு பணம் கொண்டு செல்பவர்களை மறித்து சோதனை செய்கின்றனர் என்று ஆதங்கம் தெரிவித்தார்.
இதையும் படிக்க: மக்கள் பணத்தை குடும்பத்துடன் கொள்ளை அடிக்கும் ஸ்டாலின் சார்… பெரம்பூரில் விஜய் காரசார பிரசாரம்
திருமாவளவனிடம் வசூலிக்க வேண்டும்:
திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி காலியாகிவிடும். அப்போது ஏற்கனவே 2-வது இடம் பெற்ற வேட்பாளரை எம்.பி.யாக்க வேண்டும். அங்கு இடைத்தேர்தல் நடந்தால் அந்த தேர்தலுக்கான செலவை திருமாவளவனிடம் வசூலிக்க வேண்டும். நான் காரைக்குடிக்கு மட்டும் மகன் அல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மகன். என் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எனக்கு தெரியும் என்று அவர் கூறினார்.