காரைக்குடியில் இன்று விஜய் பரப்புரை.. 37 நிபந்தனைகள்.. மரங்களுக்கு இரும்புத் தகடு அமைத்து பாதுகாப்பு..
Tamilnadu Assembly Election: காரைக்குடிக்கு காலை 11.30 மணியளவில் வருகை தருகிறார். விஜய்யின் முந்தைய பிரசாரங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை காரைக்குடி பிரசாரத்திற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை சார்பில் 37 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஜய்
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை ஆகிய நான்கு தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.10) காரைக்குடியில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கு முன்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய்க்கு லட்சக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகு, சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள், பல்வேறு பரிசுகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க: தமிழக தேர்தல் “பிக்பாஸ்”.. 234 தொகுதிகள்.. 4,500 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!
11.30 மணிக்கு காரைக்குடி செல்கிறார் விஜய்:
இந்நிலையில், விஜய் இன்று காலை மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மேலூர் மற்றும் திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு காலை 11.30 மணியளவில் வருகை தருகிறார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்திலிருந்து வ.உ.சி சாலை, கழனிவாசல் வழியாக நகர்வலமாகத் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டும் அவர், மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு உரையாற்றுகிறார்.
தேர்தல் ஆணையத்தின் 37 நிபந்தனைகள்:
விஜய்யின் முந்தைய பிரசாரங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை காரைக்குடி பிரசாரத்திற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை சார்பில் 37 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை, மதியம் 12:30 மணி முதல் 2 மணிக்குள் பிரசாரத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது. பிரசார இடத்தின் அருகே 20 மருத்துவர்கள் மற்றும் 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் வாக்கி-டாக்கி வசதியுடன் இருக்க வேண்டும்.
மரங்கள், மின் கம்பங்களுக்கு இரும்புத் தகடுகள்:
ரசிகர்கள் மரங்கள், மின் கம்பங்கள் அல்லது டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறுவதைத் தவிர்க்க, அவற்றைச் சுற்றி இரும்புத் தகடுகள் கொண்டு மறைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது. இதற்காக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்ணதாசன் மணிமண்டபம், நூலகம் போன்ற அரசு கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. பொதுமக்களுக்கு இலவசப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது. மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இதையும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!
கடுமையான நிபந்தனைகள்:
ஏற்கனவே சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் இது போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்தார். இதனால், இன்று காரைக்குடியில் திட்டமிட்டபடி பிரசாரம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், தற்போதைய தகவல்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு பிரசாரத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய்யின் வருகையை முன்னிட்டு காரைக்குடி நகர் முழுவதும் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரண்டுள்ளனர். காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.