நேற்று ஆதங்கத்தை கொட்டிய சரத்குமார்.. இன்று நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு.. பாஜகவில் முக்கிய பொறுப்பு?

Tamil Nadu Assembly Election: நேற்று ஆதரவாளர்களை சந்தித்ததை தொடர்ந்து, இன்று (மார்ச் 23) சரத்குமார் திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். கட்சியில் நிலவும் அதிருப்தி மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கைகளை மாநிலத் தலைவரிடம் சரத்குமார் நேரடியாக முன்வைத்துள்ளார்.

நேற்று ஆதங்கத்தை கொட்டிய சரத்குமார்.. இன்று நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு.. பாஜகவில் முக்கிய பொறுப்பு?

நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு

Updated On: 

23 Mar 2026 12:58 PM

 IST

Tamil Nadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் சட்டமன்றக் குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனை இன்று (மார்ச் 23) நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்துப் பேசினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நயினார் நாகேந்திரனின் இல்லத்திற்குச் சென்ற சரத்குமார், அவரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். முன்னதாக, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நிலையில், தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் திமுக போட்டி?.. கூட்டணி கட்சிகளுக்காக தியாகம்.. பின்னால் பலே வியூகம்!!

நிர்வாகிகள் கூட்டத்தில் அதிருப்தி:

முன்னதாக, நேற்று (மார்ச் 22) சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவில் இணைந்த பிறகு தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் உரிய பதவிகளோ, பொறுப்புகளோ வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார். தனது ஆதரவாளர்கள் தேசிய அளவில் தங்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும், கட்சியில் பதவி இல்லாமல் எப்படி செயல்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதோடு, “பாஜகவில் நமக்கான அடையாளம் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை ஏன் தொடங்கக்கூடாது?” என அவரது ஆதரவாளர்கள் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜகவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும், தங்களது கோரிக்கைகளை தேசியத் தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வோம். அப்போதும் தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு:

நேற்று ஆதரவாளர்களை சந்தித்ததை தொடர்ந்து, இன்று (மார்ச் 23) சரத்குமார் திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். கட்சியில் நிலவும் அதிருப்தி மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கைகளை மாநிலத் தலைவரிடம் சரத்குமார் நேரடியாக முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “எனது ஆதங்கத்தை நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டேன். அவர் நியாயமான கோரிக்கைகளை மேலிடத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

மேலும், வரும் தேர்தலில் தனக்கோ அல்லது தனது மனைவி ராதிகாவுக்கோ சீட் தேவையில்லை என்றும், ஆனால் கட்சிக்கு உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலைக்குப் பின் நயினார் நாகேந்திரன்:

கடந்த 2025-ம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார். தற்போது அதிமுக – பாஜக கூட்டணி இறுதியாகியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அதே நேரத்தில், கட்சியில் இணைந்துள்ள சரத்குமார் போன்ற மூத்த தலைவர்களின் அதிருப்தியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலும் நயினார் நாகேந்திரன் உள்ளார்.

இதையும் படிக்க: “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..

சரத்குமாரின் அடுத்த நகர்வு?

பாஜக மேலிடம் சரத்குமாரின் கோரிக்கைகளை ஏற்று அவருக்குத் தேசிய அளவில் ஏதேனும் பொறுப்பு வழங்குமா? அல்லது தனது ஆதரவாளர்களின் விருப்பப்படி அவர் மீண்டும் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..