தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?.. அப்போ விஜய் இல்லையா?

Tamil Nadu's wealthiest candidate: தமிழக அரசியல் வரலாற்றில் மிக அரிதான நிகழ்வாக, ஒரு வேட்பாளர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களைக் கணக்கு காட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லால்குடி தொகுதியில் அதிமுகவின் பலமான வேட்பாளராக லீமா ரோஸ் களமிறங்கியுள்ளது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?.. அப்போ விஜய் இல்லையா?

லீமா ரோஸ் மார்ட்டின்

Updated On: 

07 Apr 2026 11:48 AM

 IST

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில், திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தமிழகத்திலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக உருவெடுத்துள்ளார். லீமா ரோஸ் தனது பெயரில் உள்ள சொத்துக்களை இரண்டு பிரிவுகளாகப் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அசையும் சொத்துக்கள் சுமார் ரூ.139 கோடி. அசையா சொத்துக்கள் சுமார் ரூ. 909 கோடி என இவரது பெயரில் மட்டும் சுமார் ரூ.1,060 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதுதவிர்த்து, லீமா ரோஸின் கணவரான மார்ட்டின் பெயரில் உள்ள சொத்துக்கள் இவரை விடப் பல மடங்கு அதிகமாகும்.

இதையும் படிக்க: “காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி”.. திமுக மீண்டும் தொடர வேண்டுமா? இபிஎஸ் சரமாரி தாக்கு!!

கணவர், மகனின் சொத்து மதிப்பு:

மார்ட்டினின் அசையும் சொத்துக்கள் சுமார் ரூ.3,262 கோடி, அசையா சொத்துக்கள் சுமார் ரூ.877 கோடி. மொத்தமாக அவரது கணவர் பெயரில் மட்டும் சுமார் ரூ. 4,139 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, இவர்களது மகன் டைசினா மார்ட்டின் பெயரிலும் குறிப்பிடத்தக்க அளவில் சொத்துக்கள் உள்ளன. அதன்படி, டைசினா மார்ட்டினின் அசையும் சொத்துக்கள் சுமார் ரூ. 225 கோடி, அசையா சொத்துக்கள்சுமார் ரூ.439 கோடி என அவரது மகனின் பெயரில் மொத்தம் சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

தங்க நகைகளின் மதிப்பு:

தன்னிடம் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக கையிருப்பு இருப்பதாகவும், தனது கணவரிடம் 56 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். தன்னிடம் 19 ஆயிரத்து 233 கிராம் தங்கம், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 813 கிராம் வெள்ளி, ஆயிரத்து 217 கேரட் வைரம், 32 கிராம் பிளாட்டினம் இருப்பதாக லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். அதேபோல, கணவரிடம் 281 கிராம் தங்கம், 20 ஆயிரத்து 974 கிராம் வெள்ளி உள்ளிட்ட நகைகளும், மகனிடம் 326 கிராம் தங்கம், 60 ஆயிரத்து 380 கிராம் வெள்ளி உள்ளிட்ட நகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு:

லீமா ரோஸ் சமர்ப்பித்த உறுதிமொழிப் பத்திரத்தின் அடிப்படையில், அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.6,000 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மலைக்க வைக்கும் தொகையின் மூலம், தற்போதைய தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட லீமா ரோஸ் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!

மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பீடு:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உள்ளார். அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு சுமார் ரூ.660 கோடி ஆகும். லீமா ரோஸின் சொத்து மதிப்பு இவரை விட சுமார் 9 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக அரிதான நிகழ்வாக, ஒரு வேட்பாளர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களைக் கணக்கு காட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி தொகுதியில் அதிமுகவின் பலமான வேட்பாளராக லீமா ரோஸ் களமிறங்கியுள்ளது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்