” ரெய்டு என்றதும் கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா” – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..
Tamil Nadu CM MK Stalin Speech: சேலத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்க என்ன பழனிசாமியா என பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சேலம், ஆகஸ்ட் 16, 2025: உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்க என்ன பழனிசாமியா என சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சேலத்தில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 26-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று வெல்க ஜனநாயகம் எழுச்சி மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் இடையே இருப்பது கொள்கை நட்பு. சமூகத்திற்கு தேவையான கொள்கை வலுவாக இருப்பதால் நட்பும் வலுவாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்தின் இரு முகங்களாக திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும் இருக்கின்றன.கருப்பும் சிவப்பும் இணைந்துதான் திமுக. எங்களின் பாதி நீங்கள்தான். கொள்கை உறவின் ஆழத்தை தலைமுறை கடந்தும் எடுத்து செல்ல வேண்டும். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
ஒவ்வொரு மாநாட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது:
1950-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வரலாற்றை போற்றும் விதமாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மனு அளித்தார். அவர் கேட்டு எதையும் தட்டிக் கழித்தது கிடையாது. முடியாது என்று சொல்ல முடியாது.
ஒவ்வொரு மாநாட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவினை அதிகாரிகளிடம் தொலைபேசியில் வழங்கியிருக்கிறேன். வழங்கி விட்டுத்தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறேன். நாளையில் இருந்து இந்தப் பணி தொடங்கப்பட இருக்கிறது.
1951-ல் நடந்த திமுக முதல் மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா, ஜீவா அவர்களை அழைத்தார். பொதுவுடமை முகாமாக இருக்க வேண்டும் என்று அண்ணா விரும்பினார். நாடு பெரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில் அனைவரும் ஒரே மேடையில் கூடியுள்ளோம். நம்முடைய ஒற்றுமைதான் சிலரின் கண்ணை உறுத்தி கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணி ஒற்றுமை – கம்யூனிஸ்ட் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பாசம்:
எவ்வளவு சதி செய்தாலும், குழப்பம் ஏற்படுத்தினாலும், போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாக இருப்பதால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட்கள் மீது திடீர் பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அடிமைத்தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா அதற்கு அவருக்கு தகுதி இல்லை.
எங்களைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையை பற்றி தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதற்காக கூட்டணித் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசக்கூடாது. கம்யூனிஸ்ட் தலைவர்களை விட , திருமாவளவனை விட எடப்பாடி என்ன தியாகம் செய்து விட்டார். அதை நிரூபிக்க முடியுமா. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பபது இந்த இயக்கங்கள்தான். மக்கள் பிரச்சினையை தீர்க்க நினைக்காமல், கூட்டணித் தலைவர்கள் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். கூட்டணியை களங்கப்படுத்த வேண்டும் என்ற மலிவான சிந்தனையுடன் இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்கள் வைப்பது நியாயமான கோரிக்கை:
கூட்டணியில் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை வைக்க கம்யூனிஸ்ட்கள் தவறியதில்லை. நாங்களும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் ஜனநாயகம். அதனால்தான் தோழமைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை ஜாதியவாதம், வகுப்புவாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றை எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
ஏனென்றால் எங்கள் லட்சியம் பெரிது. அந்த லட்சியத்திற்காகத்தான் எல்லோரும் போராடி வருகிறோம். ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் நம்மை இணைத்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நம்முடைய கூட்டணியை விரும்பவில்லை. அதனால் நமக்கிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களுடைய சதித்திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது. அதனால்தான் வெல்க ஜனநாயகம் எழுச்சி மாநாடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் சதி:
ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும். அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது. ஆனால் ஜனநாயகத்திற்கு அடிப்படையான தேர்தலையே பாஜக அரசு கேலிக் கூத்தாக மாற்றி விட்டது. தேர்தல் ஆணையத்தை தங்களது கிளை அமைப்பாக பாஜக அரசு மாற்றி விட்டது. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை மாற்றி விட்டார்கள். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில்தான் சதி செய்கிறார்கள் என பார்த்தால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள். மக்களாட்சியைக் காக்க இந்த சதியை அம்பலப்படுத்தியிருக்க கூடிய ராகுல்காந்திக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு முறையான பதிலளிக்காமல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது.
மேலும் படிக்க: அதிமுக பேனர் விழுந்து விபத்து.. நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி..
தேர்தலுக்கு அடிப்படை ஆதாரமே வாக்காளர் பட்டியல்தான். சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அடிப்படையான வாக்காளர் பட்டியலை நேர்மையாக தயாரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறி விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக சுதந்திரமாக நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். சரிபார்த்து உறுதி செய்யும் பணியை தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும். பாஜக ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் என்று சொன்னது அனைத்தும் தற்போதும் நடைபெற்று வருகிறது.
மீண்டும் திராவிட ஆட்சி மலரும்:
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள். தங்களுக்கு உண்மையாக பணியாற்றுபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியும். நவீன தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் காரணம் யார் என்று அவர்கள் அறிவார்கள். 2021-ல் வெற்றி பெற்றது போலவே 2026-லும் மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம். திராவிட மாடல் 2.o ஆட்சி உருவாகும். அதற்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் உடன் இருக்க வேண்டும் . கம்யூனிஸ்ட்கள் களம் இறங்கினால் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயகம் காக்க களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட்களுக்கு என்னுடைய ரெட் சல்யூட்.
இன்றைக்கு ஆட்சியைப் பொறுத்தவரை எல்லா துறைகளிலும் முதலிடம் என்பதை மத்தியில் இருப்பவர்கள் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறார்கள்.திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என பேசியுள்ளார்.