ஓட்டு போட போறீங்களா? இதையெல்லாம் மறக்காம எடுத்துட்டு போங்க!
Tamil Nadu Assembly Elections: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டிய பொருள்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அத்துடன், முதியோர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள் எவை.

வாக்காளர்கள் எடுத்து செல்ல வேண்டிய பொருள்கள்
தமிழகம் முழுவதும் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 75,035 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். இவர்களுக்காக வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு கட்ட முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர்களின் வரிசை எண் உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
அதன்படி, நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை முதல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல தொடங்குவர். அவ்வாறு செல்லும் போது, வாக்காளர்கள் தவறாது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவது வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் படிக்க: வில்லிவாக்கம் 2026: “வாக்குறுதி அல்ல.. வாழ்வாதார மீட்பு!” – தி.மு.க-வை அதிர வைக்கும் அ.தி.மு.க
பொது மக்கள் எடுத்து செல்ல வேண்டிய பொருள்கள்
இதில், வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், பான் கார்டு, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 வகையான புகைப்படத்துடன் கூடிய அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அத்துடன், தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், காலை வேளையில் வாக்களிக்க செல்வது நன்றாகும். ஏனென்றால், மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
முதியோர்கள் கவனத்துக்கு. . .
அவ்வாறு செல்லும் வாக்காளர்கள், குடை, குடிநீர், செல்போன் ஆகியவற்றை மறவாது எடுத்துச் செல்ல வேண்டும். இதில், குறிப்பாக முதியோர்கள் மற்றும் குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக குடைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ளே செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால் வாக்குச்சாவடி மையங்களில் செல்போன்கள் முன்னதாகவே பெறப்படும்.
மாலையில் வாக்களிக்க செல்லலாமா
மாலையில் வாக்களிக்க செல்லலாம் என்ற எண்ணம் உள்ள வாக்காளர்கள் 6:00 மணிக்கு முன்னதாகவே வாக்களிக்க செல்ல வேண்டும். ஏனென்றால், கடைசி நேரத்தில் வாக்களிக்க செல்வது சற்று தாமதத்தையோ, இடையூரையோ ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மொத்தத்தில் காலை வேளையில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பது சிறந்ததாகும்.
மேலும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..