தபால் வாக்குகளை கையாள புதிய யுக்தி… திருச்சியில் அமைந்தது சிறப்பு மையம்!
Postal Vote Distribution: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தபால் வாக்குகளை பிரித்து அனுப்புவதற்கு சிறப்பு மையம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதற்கான பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது வாக்குகளை அஞ்சல் வாக்குகள் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் உரிய தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகள் தொடர்பான படிவம் 12- ஐ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பிரித்து வழங்குவதற்காக திருச்சி மாவட்டம் சிறப்பு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சிறப்பு மையம்
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குகள் தொடர்பான படிவம் 12- ஐ பிரித்து வழங்கும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மஹாலில் பொதுவான சிறப்பு மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார். இங்கு, தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தபால் வாக்குகளை பிரித்து வழங்கும் பணிகளை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க: பூர்வீக சொத்து ஏதுமில்லை.. துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தபால் வாக்கு தொடர்பான படிவம் விநியோகம்
இதை தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சரவணன் முன்னிலையில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் தபால் வாக்குகள் தொடர்பான படிவம் 12, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் பிரித்து வழங்கப்பட்டது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்தலில் புகுத்தப்பட்டுள்ள புதிய யுக்தி
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், முன்பு நடைபெற்ற தேர்தல்களை விட, எதிர்வரும் தேர்தலை வித்தியாசமான முறையில் நடத்துவதற்காக பல்வேறு புதிய யுக்திகளை தேர்தல் ஆணையம் புகுத்தி வருகிறது. இதற்காக வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு, 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு, தபால் வாக்குகள் பிரித்து வழங்கும் சிறப்பு மையம் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வருகிறது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!