செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல் – சசிகலா அறிக்கை..

Sasikala Statement: செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல். இது கட்சி நலனுக்கு உகந்ததல்ல. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை சிந்தித்து பார்க்க வேண்டும் என சசிகலா, எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல் - சசிகலா அறிக்கை..

சசிகலா

Published: 

06 Sep 2025 21:18 PM

 IST

சசிகலா அறிக்கை, செப்டம்பர் 6, 2025: அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், செப்டம்பர் 6, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, உட்கட்சி விவகாரத்தை வெளியில் வெளிப்படுத்தியதன் காரணமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, வெளியேற்றினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதில்:

இதற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்கிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக தழைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அனைவரும் இணைய வேண்டும் எனக் கூறினேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் கருத்து தெரிவித்தேன். பொறுப்பில் இருந்து நீக்கியது எனக்கு வேதனை அல்ல, மகிழ்ச்சிதான்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

சசிகலா அறிக்கை:

எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை சசிகலா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல். இது கட்சி நலனுக்கு உகந்ததல்ல. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்.. அதிமுக நிர்வாகிகள் 300 பேர் ராஜினாமா..

இணைய வேண்டும் எனக் கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் கூறப் போகிறோம்? அனைவரும் தாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைய இலக்கு ஆக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.