புதுச்சேரி தேர்தல்.. வாக்களித்துவிட்டு பைக்கில் பறந்த முதல்வர் ரங்கசாமி.. வைரல் வீடியோ!!
Puducherry Assembly Election: எந்தவொரு பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் இன்றி, சாதாரண குடிமகனைப் போல அவர் பைக்கில் சென்ற காட்சி அங்கிருந்த வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் "மக்களின் முதலமைச்சர்" என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.

முதல்வர் ரங்கசாமி
Puducherry Polls 2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.9) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதையொட்டி, அங்கு காலை காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, இந்த தேர்தலில் இளைஞர்களும் அதிகளவில் தங்களது ஜனநாயக கடமையாற்ற முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: புதுச்சேரி தேர்தல் 2026.. வாக்காளர்களுக்கு மலர் கொடுத்து, ‘வணக்கம்’ கூறி வரவேற்கும் ‘நிலா’ ரோபோ.. வாக்குச்சாவடியில் புதுமை!!
வழக்கமான ஆன்மீகத் தொடக்கம்:
இதனிடையே, இந்தத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான என்.ரங்கசாமி மீது ஒட்டுமொத்தப் பார்வையும் இருந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி, முக்கியமான எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் தனது ஆன்மீக குருவான ‘அப்பா பைத்தியம் சாமி’ கோவிலில் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இன்றும் அதேபோலச் சிறப்பு வழிபாடுகளை முடித்துவிட்டு, தனது சொந்த ஊரான திலாசுப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார்.
இருசக்கர வாகனப் பயணம்:
#WATCH | Puducherry CM and All India NR Congress (AINRC) candidate from Mangalam and Thattanchavady assembly constituency, N Rangaswamy, leaves on his bike after casting his vote for the Puducherry Assembly Elections. pic.twitter.com/6X7TJFanED
— ANI (@ANI) April 9, 2026
முதலமைச்சர் அந்தஸ்தில் இருந்தாலும், புதுச்சேரி தெருக்களில் சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் செல்வது ரங்கசாமியின் தனி அடையாளமாகும். இன்றும் தனது ஜனநாயகக் கடமையாற்ற அவர் தனது Yamaha RX 100 பைக்கில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். தொடர்ந்து, தனது வாக்குகளை செலுத்திய அவர், பின் தனது பைக்கில் ஏறி, அங்கிருந்து புறப்பட்டார். எந்தவொரு பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் இன்றி, சாதாரண குடிமகனைப் போல அவர் பைக்கில் சென்ற காட்சி அங்கிருந்த வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் “மக்களின் முதலமைச்சர்” என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.
வெற்றி குறித்து நம்பிக்கை:
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களது அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்குப் பொதுமக்கள் முழு ஆதரவை வழங்குவார்கள். மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: Puducherry Elections 2026 : புதுச்சேரியில் இன்று ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல் போர்… கோட்டையில் கொடி நாட்டப்போவது யார்!
புதுச்சேரி தேர்தல் நிலவரம்:
புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி சுமார் 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கப் போராடும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா (INDIA) கூட்டணி கடும் சவாலை அளித்து வருகிறது.