மாம்பழச் சின்னம் வைத்து ஜப்பானில் கூட போட்டியிடட்டும் – அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்..
PMK Ramadoss: பீகார் மாநில தேர்தலில் பாமக போட்டியிடுவது தொடர்பாக பேசிய ராமதாஸ், “ பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து அன்புமணி தரப்பு மாம்பழச் சின்னம் பெற்றுள்ளனர். பீகாரிலே அல்ல, மொரீஷியஸ், தென் கொரியா, ஜப்பான் கூட போய் மாம்பழச் சின்னத்தில் நிற்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 26, 2025: பீகார் மாநில தேர்தலில் பாமக போட்டியிடப் போவதாக பொய் கூறி மாம்பழச் சின்னம் பெற்றுள்ளதாக ராமதாஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவரும் தனித்தனியாக பிரிந்து கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாமக உட்கட்சி விவகாரம்:
பொதுக்குழு கூட்டங்களையும் இருவரும் தனித்தனியாக நடத்தினர். அப்போது, அன்புமணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவரது தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது. அதே சமயத்தில், நிறுவனர் ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பதில் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அவர் பதிலளிக்காத காரணத்தால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
மேலும் படிக்க: இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!
இதனால் கட்சியினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க, பாட்டாளி மக்கள் கட்சியை கைப்பற்றும் போட்டியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் போராடி வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பிற்கே பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியதாகவும், அவரது பதவி நீக்கம் செல்லாது என்றும் அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் உத்தரவுப்படி ஜிகே மணி டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்து வந்தார். இதில், ராமதாஸ் தரப்பினருக்கே கட்சிச் சின்னம், கொடி அனைத்தும் ஒதுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!
பீகார் மாநிலத் தேர்தலில் பாமக போட்டி – ராமதாஸ் சொன்னது என்ன?
இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் வன்னியர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து அன்புமணி தரப்பு மாம்பழச் சின்னம் பெற்றுள்ளனர். பீகாரிலே அல்ல, மொரீஷியஸ், தென் கொரியா, ஜப்பான் கூட போய் மாம்பழச் சின்னத்தில் நிற்கட்டும். அன்புமணியை என்றைக்கும் கட்சியில் இருந்து நீக்கிய நாளிலேயே எல்லாம் முடிந்துவிட்டது. பொய் வைத்து பேசுவோரின் வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என அவர் மருந்தும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்,” எனக் கூறினார்.