விஜயுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா.. அறிவிப்பு எப்போது தெரியுமா? வெளியான தகவல்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள சூழலில், அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து சசிகலா ஆலோசித்து வருவதாகவும், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
பிப்ரவரி 10,2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அதிமுக – திமுக கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக, புதிய தமிழகம், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சசிகலா, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!
அதிமுக – கூட்டணி கட்சிகள்:
அதிமுகவைப் பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக சசிகலா முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?
சசிகலாவிற்கு நோ சொன்ன எடப்பாடி பழனிசாமி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள சூழலில், அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து சசிகலா ஆலோசித்து வருவதாகவும், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனது சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அரசியல் கட்சியான அண்ணா திராவிட கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சசிகலா பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்தநாளில் கூட்டணி அறிவிப்பு?
அதே நேரத்தில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அண்ணா திராவிட கழகத்தின் இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த், நேற்றைய தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. எனவே, வரக்கூடிய சில நாட்களில் சசிகலா – தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.