சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட ஓ. பன்னீர்செல்வம் ? அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரம்..
OPS - Sasikala Meet: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உடன் சில முக்கிய புள்ளிகள் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - சசிகலா
சென்னை, செப்டம்பர் 2, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் அணியாக இரண்டாக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து, இருவரும் பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து, கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டனர். பின்னர் 2021 ஆம் ஆண்டு அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உருவானது. அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இதனால், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதன் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகிறார். தற்போது அதிமுகவை அவர் வழிநடத்தி வருகிறார் என்பது நிதர்சனம். இதற்கிடையில், அதிமுகவைப் பொருத்தவரையில் டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பிரிந்து உள்ளனர்.
மேலும் படிக்க: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!
அதிமுகவில் நடக்கப்போகும் நிகழ்வுகள் என்ன?
மேலும், 2025 ஏப்ரல் மாதத்தில் உள்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததன்படி, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தது. அதன் பின்னர், என்டிஏ கூட்டணியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் விலகினார். அவர் மீண்டும் அதிமுகவில் இணைய முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தைப் போலவே சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் அதிமுகவில் மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை கட்சியில் சேர்க்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சசிகலா கடிதம்:
தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் அதிமுக ஒன்றுபட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ஒன்று பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி என்பதை, நம் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பலமுறை நிரூபித்துள்ளனர். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்,” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: இபிஎஸ் உடன் மோதல்? – செங்கோட்டையன் எடுத்த முடிவு!
சசிகலாவை சந்திக்கும் ஓ. பன்னீர்செல்வம்:
இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக சசிகலா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஓ. பன்னீர்செல்வத்துடன் புகழேந்தி, ஜே.டி. பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், அதிமுகவில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் வரும் நாட்களில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.