புதிய கட்சியை தொடங்கிய புகழேந்தி – பெயர் இதுதான்
Puratchi ADMK : சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் வரிசையில் முன்னாள் அதிமுக அமைச்சர் புகழேந்தி புரட்சி அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தேர்தலில் போட்டியிட தனி சின்னம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதிய கட்சி தொடங்கிய புகழேந்தி
சென்னை, மார்ச் 4 : அதிமுகவில் இருந்து சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் வரிசையில் முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி புரட்சி அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாரம் ஒரு புது கட்சி உருவாகும் சூழல் நிலவி வருகிறது. அந்த வரிசையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ புகழேந்தி தற்போது புரட்சி அதிமுக என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வந்தார்.
அதன் பின்னர் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் நின்று தோல்வியைத் தழுவினார். அதன் பிறகு பாஜகவில் இருந்து பாஜக ஆதரவும் அவருக்கு இல்லாமல் போனது. மேலும் சமீபத்தில் திமுகவில் ஓ.பன்னர் செல்வம் இணைந்தது பேசுபொருளானது. இந்த நிலையில் தான் அவரது ஆதரவாளராக இருந்து வந்த புகழேந்தி புது கட்சியை தொடங்கியுள்ளார்.
இதையும் படிக்க : இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை..
புதிய கட்சியைத் தொடங்கியுள்ள புகழேந்தி
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அதேபோல் சசிகலாவும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதிய கட்சிகள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வரிசையில் புகழேந்தியும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சிக்கு புரட்சி அதிமுக என பெயரிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், புரட்சி என்றால் அது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் தேர்தலில் தனது கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் யாருடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த பிறகு, புகழேந்தி அதிமுகவில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே இருந்தது. ஆனால் அவர் தனியாக புதிய கட்சி தொடங்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : மாணவர்களுக்கு இலவச கல்வி முதல் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வரை… விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!
இது குறித்து பேசிய அவர்,பிறரைப் போல நானும் கட்சி தொடங்கிவிட்டேன் என சொல்லிக்கொள்ளாமல் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். புரட்சி என்ற சொல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையே குறிக்கும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனி சின்னம் கோரியுள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி காணாமல் போவார் என்று பேசினார்.