அதிமுக பேனர் விழுந்து விபத்து.. நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி..
AIADMK Banner Accident: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் செங்கம் செல்லும் போது அதிமுக பேனர் கிழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்,

பேனர் விழுந்து விபத்து
திருவண்ணாமலை, ஆகஸ்ட் 16, 2025: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்க வைக்கப்பட்டிருந்த அலங்கார பேனர் அவர் கடந்து சென்ற சில நொடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மும்மரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக ஆளும் திமுக அரசு தரப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம்:
அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 7 2025 தேதி தொடங்கி ஜூலை 21 2025 அன்று முடிவடைந்தது. அதேபோல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 24 2005 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 2025 ஆம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி, ஓசூர், ஆரணி திருவண்ணாமலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பேனர் விழுந்து விபத்து:
அந்த வகையில் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 15 2025 தேதி ஆன நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யாறு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே உரையாற்றினார். அதேபோல் ஆகஸ்ட் 16 2025 தேதி ஆன இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பேருந்தில் புறப்பட்டுச் சென்றார்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?
அப்போது செங்கம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையில் வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவு பேனர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எடப்பாடி பழனிசாமியின் வாகனம் அந்த அலங்கார வளைவை கடந்த ஒரு சில நொடிகளிலேயே அந்த பேனர் கீழே விழுந்து உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனம் பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க: தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு..
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி:
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் இருந்து உடனே கீழே இறங்கி பேனர் விழுந்து விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று அங்கு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதிமுக பேனர் கீழே விழுவது இது முதல் முறை அல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியபோது மேம்பாலத்தின் சுவரில் வைத்திருந்த அதிமுக பேனர் திடீரென கிழிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக மகனை அழைத்துச் சென்ற தந்தையின் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது