Edappadi Election Result: அதிமுகவின் கோட்டையான எடப்பாடி தொகுதியின் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?

Edappadi Assembly Election Result 2026: எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் "சொந்த ஊர்" என்ற சென்டிமென்ட் மற்றும் தொகுதியில் அவர் செய்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அவருக்குப் பெரும் பலம். 2021-ல் இருந்த அதே எழுச்சி இப்போதும் தொடர்வதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

Edappadi Election Result: அதிமுகவின் கோட்டையான எடப்பாடி தொகுதியின் நிலவரம் என்ன? யாருக்கு சாதகம்?

மாதிரிப் புகைப்படம்

Published: 

04 May 2026 06:31 AM

 IST

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான இது, கடந்த சில தசாப்தங்களாக அக்கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதியில் இதுவரை 7 முறை போட்டியிட்டுள்ளார் (1989, 1991, 1996, 2006, 2011, 2016, 2021). இதில் அவர் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, 2011 முதல் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

2021 தேர்தலில் 66.27% வாக்குகளைப் பெற்று, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.சம்பத்குமாரை விட சுமார் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.

2026 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள்:

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக தரப்பில் சி. காசி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், பிரியதர்ஷினி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால், சுயேட்சை வேட்பாளரை அக்கட்சி இத்தொகுதியில் ஆதரித்துள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

மக்களின் முக்கிய தேவைகளும் எதிர்பார்ப்புகளும்:

வேளாண்மை மற்றும் நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் சில, சேலம் பூலாம்பட்டியையும், ஈரோடு நெரிஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கை. தற்போது படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது. ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பகுதிகளில் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் மற்றும் நூல் தட்டுப்பாட்டைப் போக்க அரசு உதவ வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 ஏரி நிரப்பும் திட்டத்தின் எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஜலகண்டாபுரத்தில் இருந்து மேட்டூர் மற்றும் கிராமப்புறங்களுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.

வெற்றி வாய்ப்பு குறித்த அலசல்:

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் “சொந்த ஊர்” என்ற சென்டிமென்ட் மற்றும் தொகுதியில் அவர் செய்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அவருக்குப் பெரும் பலம். 2021-ல் இருந்த அதே எழுச்சி இப்போதும் தொடர்வதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதே சமயம், திமுக தனது அரசு இயந்திரத்தையும் நலத்திட்டங்களையும் (மகளிர் உரிமைத் தொகை போன்றவை) பயன்படுத்தி களம் காண்கிறது.

பாமக-வின் வாக்குகள் இந்தத் தொகுதியில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதால், அதிமுக கூட்டணி தற்போதைக்குத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், வாக்குப்பதிவு சதவீதம் 85% கடந்துள்ள நிலையில், முடிவுகள் எதிர்பாராத மாற்றங்களைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..