ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு.. தவெகவுக்கு வந்தது புதிய சிக்கல்!!
Tamilnadu Assembly Election: வேட்புமனுவில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட புகார்களை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த மனுவை உடனடியாக ஏற்காமல் 'நிறுத்தி வைப்பதாக' அறிவித்தார். இது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என்றாலும், போதிய விளக்கங்களை ஆதவ் அர்ஜுனா தரப்பில் இருந்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று காலை வேட்புமனு பரிசீலனை தொடங்கிய நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை ஏற்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துகளை வேட்புமனுவை மறைத்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?.. அப்போ விஜய் இல்லையா?
வேட்புமனு தாக்கலும் ஆட்சேபனையும்:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா, அதற்கான முறைப்படியான வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார். வழக்கமாக வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும்போது, எதிர்க்கட்சியினரோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ சில ஆட்சேபனைகளை முன்வைப்பதுண்டு. அந்த வகையில் ஆதவ் அர்ஜுனாவின் மனு மீதும் சில முக்கியமான புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக திமுக, அதிமுக வேட்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் மீது நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் அல்லது அது தொடர்பான சட்ட ரீதியான விவரங்களை தவறாகக் குறிப்பிட்டதாகவும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரூ.2 கோடி பணத்தை வாக்காளர்களுக்கு வழங்க ஆதவ் அர்ஜுனா கணக்கு காட்டாமல் மறைத்து வைத்துள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை:
வேட்புமனுவில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட புகார்களை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த மனுவை உடனடியாக ஏற்காமல் ‘நிறுத்தி வைப்பதாக’ அறிவித்தார். இது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என்றாலும், போதிய விளக்கங்களை ஆதவ் அர்ஜுனா தரப்பில் இருந்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழல் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே ஒருவிதப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சட்ட ரீதியாக இதனை எதிர்கொண்டு வேட்புமனுவை உறுதி செய்வோம் என்றும் அக்கட்சியின் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: “காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி”.. திமுக மீண்டும் தொடர வேண்டுமா? இபிஎஸ் சரமாரி தாக்கு!!
விஜய்யின் அரசியல் பிரவேசத்தில் மிக முக்கியமான நபராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனாவிற்கே இத்தகைய சிக்கல் எழுந்தது, அக்கட்சியின் தேர்தல் வியூகத்தைப் பாதிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்புமனு இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறுமா இல்லையா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும்.