மாதம் ரூ.6,500 சம்பளம்… இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!

Inspiring Entrepreneur Journey: இந்தியாவின் தொழிற்கனவு இல்லாத நபர்களே இல்லை எனலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் ரிஸ்க் காரணமாக, பலருக்கும் தயக்கம் ஏற்படும். அப்படி மாதம் ரூ.6,500 மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் துணிந்து எடுத்த ரிஸ்க் காரணமாக இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.6,500 சம்பளம்... இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!

ரோகித் டாண்டன்

Published: 

04 Aug 2025 17:10 PM

டெல்லியின் (Delhi) பஸ்சிம் விஹாரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ரோகித் டாண்டன். அவரது தந்தை வானிலை ஆய்வுத் துறையில் பணிபுரிந்தார். அம்மா ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு, ரோகித் லக்னோவில் உள்ள இந்திய ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றார். அதே ஆண்டு, டெல்லியில் உள்ள ஐடிசி மௌர்யா ஷெரட்டன் அலுவலகத்தில் உதவி மேலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது அவரது முதல் சம்பளம் ரூ.6,500 மட்டுமே. அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, 2008 ஆம் ஆண்டு லண்டனில் (London) உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து அவர் ஆண்டுதோறும் ரூ.32 லட்சம் சம்பாதிக்கத் தொடங்கினார். ஆனால், அவரது தொழிற் கனவு அவரைத் தூங்கவிடவில்லை.  கடந்த, 2009 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிய அவர், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார். ரோஹித் ரூ.10 லட்சம் ஆரம்ப முதலீட்டில் ‘யம்மி டம்மி’ என்ற கார்ப்பரேட் கேட்டரிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வாடிக்கயாளர்களின் ஆதரவால் கிடைத்த அசூர வளர்ச்சி

யம்மி டம்மி நிறுவனம் விரைவில் வளரத் தொடங்கியது. அந்நிறுவனத்தின் புகழ் காரணமாக இது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஜென்பேக்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உணவு வழங்க, ரோகித் டண்டனுடன்  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.  மேலும் குர்கானில் உள்ள டிஎல்எஃப் ஃபேஸ்-3 இல் 650 சதுர அடி சிறிய இடத்திலிருந்து தொடங்கி, அதன் வணிகம் வேகமாக வளர்ந்தது. ரோஹித்தின் நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தினமும் 300 – 400 பேருக்கு உணவுகளை வழங்கத் தொடங்கியது. அதன் ஆண்டு வருமானம் ரூ.17-18 லட்சத்தை எட்டியது.

இதையும் படிக்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!

இதனைடுத்து 2015 ஆம் ஆண்டு வாக்கில், யம்மி டம்மி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனமாக மாறியது. இது தினமும் 6000 உணவுகளை வழங்கத் தொடங்கியது. அதன் ஆண்டு வருவாய் ரூ.5 கோடியை எட்டியது. 2016 ஆம் ஆண்டில், ரோஹித் யம்மி டம்மியை விட்டு வெளியேற முடிவு செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டில், தனது நண்பர் கரண் மக்கனுடன் சேர்ந்து ஃப்ரெட்டர்னிட்டி ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

சைனீஸ் பாக்ஸ் ரெஸ்டாரண்ட்டிற்கு கிடைத்த வரவேற்பு

இருவரும் ‘சைனீஸ் பாக்ஸ்’ என்ற ரெஸ்டாரண்ட்டை கடந்த 2017 ஆம் ஆண்டு குர்கானில் தொடங்கினர். இது சீன உணவு வகைகளை வழங்கும் ஒரு டேக்அவே உணவகம். சைனா பாக்ஸ் விரைவான பிரபலத்தைப் பெற்றது. 2019 ஆம் ஆண்டு வாக்கில், இது டெல்லியில் மட்டும் 15 விற்பனை நிலையங்களாக விரிவடைந்தது.  சைனீஸ் பாக்ஸின் வளர்ச்சியினால், கிளவுட் கிச்சன் என்ற மாடலை அறிமுகப்படுத்தினர். அதில் பிரியாணி முதல் பாஸ்தா மற்றும் பீட்சா வரை பலதரப்பட்ட உணவுகளை மக்களுக்கு அளித்தனர்.

இதையும் படிக்க : சுனாமியில் மக்களை காப்பாற்றியவர்.. இன்று 1000 கோடி மதிப்பிலான நிறுவனத்துக்கு அதிபதி – யார் இந்த விஜய் அரிசெட்டி!

கடந்த 2020 ஆம் ஆண்டில், இருவரும் பல்வேறு உணவுகளை வழங்கும் ஒரு புதிய கஃபே மாதிரியை உருவாக்க முடிவு செய்தனர்.  இருவரும் இணைந்து ஜோகா என்ற கஃபேவை  தொடங்கினர்.   இது 2023 ஆம் ஆண்டுக்குள் 130 க்கும் மேற்பட்ட கஃபேக்களுடன் வேகமாக வளர்ந்தது.  இவை நாடு முழுவதும் பெங்களூரு, மும்பை மற்றும் ஜலந்தர் போன்ற முக்கிய நகரங்களில் உள்ளன.

ஜோகோ கஃபேயின் தனித்துவம்

தனது சொந்த அடையாளத்தை உருவாக்க, வார இறுதி நாட்களில் நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். ஜோகா கஃபே, ஜோகா டின்னர், யோலோ கோர்ட்யார்ட் மற்றும் பிளிங்க் ரெஸ்ட்ரோ பார் போன்ற பல்வேறு ஃபிரான்சைஸ் மாடல்களை ரோகித் வழங்கத் தொடங்கினார். அவர்களின் ஃபிரான்சைஸ் கட்டணம் ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும். இந்த ஃபிரான்சைஸ்களிடமிருந்து மாதாந்திர விற்பனையில்  4 சதவிகிதம்  ராயல்டியையும் நிறுவனம் வசூலிக்கிறது.  மேலும் 135க்கும் மேற்பட்ட கடைகளில், 10 சதவிகிதம் நிறுவனத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது, மீதமுள்ளவை நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் ஃபிரான்சைஸ்களாக இயங்குகின்றன.  சரியாக திட்டமிட்டு செயலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ரோகித்தின் வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணம்.