மலபார் கோல்ட் தூதராக பாகிஸ்தான் பிரபலம்.. கிளம்பிய சர்ச்சை!
மலபார் கோல்ட் பர்மிங்காம் ஷோரூம் திறப்பு விழாவில் பாகிஸ்தான் சமூக வலைத்தள பிரபலம் அலிஷ்பா காலித் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மீதான எதிர்ப்பு சமூக ஊடகப் பதிவுகள் வெளிவந்த நிலையில், மலபார் நிறுவனம் சர்ச்சையை கிளப்பியதாக விஜய் படேலுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மலபார் கோல்ட் நிறுவனத்தின் தூதராக பாகிஸ்தான் செல்வாக்கு மிக்கவர் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2025, செப்டம்பர் 6 அன்று பர்மிங்காமில் புதிதாக விரிவாக்கப்பட்ட ஷோரூமை நிறுவனம் திறந்து வைத்த பிறகு சர்ச்சை தொடங்கியது, அங்கு பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தானிய செல்வாக்கு மிக்க அலிஷ்பா காலித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமாக இருந்தாலும் பாகிஸ்தானை பின்னணியாக கொண்ட அலிஷ்பா காலித் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து அவரது முந்தைய சமூக ஊடகப் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விஷயத்தை மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியதாக சமூக ஊடக பயனர் விஜய் படேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மலபார் நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான எச்சரிக்கை அறிவிப்பின் சில பகுதிகளை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டு, தனது பதிவுகளுக்காக சிவில் காவலில் வைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
விஜய் படேல் வெளியிட்ட பதிவு
URGENT SUPPORT NEEDED.
So MP Ahammed Owned Malabar Gold wants to send me to jail for exposing their Pakistani influencer collaboration, who has mocked our operation Sindoor.
I am willing to go to jail for the pride of our Army.
You can’t silence me just because you have the… pic.twitter.com/hCJqKCwZJa
— Vijay Patel (@vijaygajera) October 15, 2025
இதுதொடர்பாக பதிலளித்துள்ள விஜய்படேல், “எம்.பி. அகமதுவுக்குச் சொந்தமான மலபார் கோல்ட், எங்கள் ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்த அவர்களின் பாகிஸ்தான் செல்வாக்கு கூட்டு முயற்சியை அம்பலப்படுத்தியதற்காக என்னை சிறைக்கு அனுப்ப விரும்புகிறார். இந்திய இராணுவத்தின் பெருமைக்காக நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களிடம் பணம் இருப்பதால் மட்டும் நீங்கள் என்னை அடக்க முடியாது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மலபார் கோல்டு நிறுவனம் ஒரு புகாருடன் இந்த சம்பவம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் மலபார் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில், பாகிஸ்தான் பிரபலம் அலிஷ்பா காலித் பங்கேற்றது குறித்து பதிவிடப்பட்ட சர்ச்சையை தூண்டும் அனைத்து சமூக ஊடக பதிவுகளையும் நீக்க உத்தரவிட்டது. இதன்மூலம் மலபார் நிறுவனம், தங்களை பாகிஸ்தான் சார்பு நடவடிக்கைகளாக விமர்சிப்பவர்களை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அலிஷ்பாவின் பெரும்பாலான பதிவுகள் மே 2025 இல் வெளியிடப்பட்டவையாக உள்ளது. அதில் அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அலிஷ்பா இப்போது இந்தப் பதிவுகளை தனது கணக்கிலிருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.