Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

க்ரீன்லாந்து ஏன் அமெரிக்காவிற்கு முக்கியம்? அதிபர் டிரம்ப் பகிர்ந்த புகைப்படங்கள்..

ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் கிரீன்லாந்து பகுதியைச் சுற்றி அதிகரித்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகிறார். டென்மார்க் மட்டும் இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியாது என்றும், அமெரிக்காவின் உதவி அவசியம் என்றும் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

க்ரீன்லாந்து ஏன் அமெரிக்காவிற்கு முக்கியம்? அதிபர் டிரம்ப் பகிர்ந்த புகைப்படங்கள்..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jan 2026 09:21 AM IST

ஜனவரி 21, 2026: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும், உலகளாவிய பாதுகாப்புக்கும் கிரீன்லாந்து மீது அமெரிக்கா கட்டுப்பாடு அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் “நல்ல” தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து உலகப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது:

Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், “கிரீன்லாந்து தொடர்பாக மார்க் ரூட்டுடன் மிகச் சிறந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்திக்க ஒப்புக் கொண்டோம். கிரீன்லாந்து தேசிய மற்றும் உலகப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது. இதில் பின்னடைவுக்கு இடமில்லை – இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார மாநாடு (WEF) 2026 கூட்டத்தில் டிரம்ப் உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

உலக அமைதியை உறுதி செய்யக்கூடிய ஒரே சக்தி அமெரிக்கா:

ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் கிரீன்லாந்து பகுதியைச் சுற்றி அதிகரித்து வருவதாக டிரம்ப் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகிறார். டென்மார்க் மட்டும் இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியாது என்றும், அமெரிக்காவின் உதவி அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். “உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நாடு அமெரிக்காதான். என் முதல் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். உலக அமைதியை உறுதி செய்யக்கூடிய ஒரே சக்தி அமெரிக்கா தான். அது பலத்தின் மூலம் தான் சாத்தியம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், நேட்டோ தலைவர் ரூட் அனுப்பிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில், “சிரியாவில் நீங்கள் செய்தது அற்புதம். டாவோஸில் நடைபெறும் ஊடக சந்திப்புகளில், சிரியா, காசா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் உங்கள் பங்கை நான் முன்வைப்பேன். கிரீன்லாந்து தொடர்பாக தீர்வு காண நான் உறுதியாக உள்ளேன்” என ரூட் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு.. கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் பொதுமக்கள்!

இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மாக்ரோன், “கிரீன்லாந்து விவகாரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளதாக டிரம்ப் பகிர்ந்த மற்றொரு செய்தி கூறுகிறது. டாவோஸுக்குப் பிறகு பாரிசில் ஜி7 கூட்டம், உக்ரைன், டென்மார்க், சிரியா, ரஷ்யா பிரதிநிதிகள் பங்கேற்கும் சந்திப்பு மற்றும் இரவு உணவுக்கு மாக்ரோன் அழைப்பு விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் பகிர்ந்த புகைப்படங்கள்:

மேலும், கிரீன்லாந்து முழுவதும் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதாகக் காட்டும் இரண்டு புகைப்படங்களையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் கனடா, கிரீன்லாந்து, வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் பகுதிகளாக காட்டப்பட்டுள்ளன. மற்றொரு படத்தில், “கிரீன்லாந்து – அமெரிக்க பிரதேசம், 2026” என்ற பலகையுடன் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் அமெரிக்கக் கொடியை நாட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கிரீன்லாந்து, ஐரோப்பா–வட அமெரிக்காவை இணைக்கும் குறுகிய பாதையில் அமைந்துள்ளதால், ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகளுக்கும், ராணுவக் கண்காணிப்புக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதால், அமெரிக்காவிற்கு மிக முக்கியமான பகுதியாக கிரீன்லாந்து விளங்குகிறது.