“பதிலடிக்கு பதிலடி!”.. இஸ்ரேலின் அணுசக்தி மையத்தை குறிவைத்த ஈரான்.. 100க்கும் மேற்பட்டோர் காயம்..
Isreal - iran War conflict: இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான பதுங்கு குழிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இஸ்ரேலின் அணுசக்தி மையத்தை குறிவைத்த ஈரான்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கியமான அணுசக்தி ஆராய்ச்சி மையமான டிமோனா (Dimona) மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆராட் பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா அணுசக்தி மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்தன. இந்தத் தாக்குதலில் டிமோனா மற்றும் ஆராட் நகரங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டிமோனா அணுசக்தி மையம் என்பது இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டங்களின் இதயமாகக் கருதப்படுகிறது. இதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “4,000 கி.மீ தூரம்.. இந்திய பெருங்கடலில் யுத்தம்.. உலகையே அதிரவைத்த ஈரானின் ‘மெகா’ ஏவுகணைத் தாக்குதல் முயற்சி..
ஈரான் தாக்குதல் பின்னணி:
ஈரானின் மிக முக்கியமான நடன்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “பதிலடிக்கு பதிலடி” என்ற ரீதியில், இஸ்ரேலின் அணுசக்தி ஆராய்ச்சி மையத்தையே ஈரான் நேரடியாகத் தாக்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். “எங்கள் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும், அதற்குச் சமமான அல்லது அதைவிடப் பெரிய அளவிலான பதிலடி கொடுக்கப்படும்” என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் விடுத்த எச்சரிக்கை:
மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது கை வைத்தால், விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதை இஸ்ரேலுக்கு உணர்த்தியுள்ளோம். டிமோனா தளம் மீதான இந்தத் தாக்குதல் ஒரு எச்சரிக்கை மட்டுமே ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அணுசக்தித் திறனை முடக்குவதே தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய போர் நிலவரம்:
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான பதுங்கு குழிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எனினும், இரு நாடுகளும் பின்வாங்கத் தயாராக இல்லாததால் பதற்றம் நீடிக்கிறது. அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் ஒருவேளை அணுக்கசிவை (Radiation Leak) ஏஏற்படுத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை உண்டாக்கும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு:
இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே சமயம், போர் மேலும் பரவாமல் தடுக்க ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம், அண்டை நாடுகளில் நிலவும் இந்தப் போர்ச் சூழல், ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் பொருளாதாரத்தையும், எண்ணெய் விநியோகத்தையும் பாதிக்கும் என்பதால் அரபு நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
இதையும் படிக்க: கத்தாரின் LNG மீது ஈரான் தாக்குதல்.. எரிவாயு உற்பத்தி முடக்கம்.. உலக நாடுகளுக்குப் பேரிடி!
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. ஈரானின் நடன்ஸ் மையத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இஸ்ரேலே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது இஸ்ரேலின் அணுசக்தி மையத்தையே ஈரான் தாக்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.