சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்த சீன நபர்… பழைய சிம் கார்டுகளுக்கு அதிகரித்த மவுசு!
ஒரு சாதாரண சிம் கார்டில் பொதுவாக 0.001 கிராமுக்கும் குறைவான தங்கமே இருக்கும் என்றும், ஆனால் வங்கி அட்டை சிப்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற மற்ற பழைய பொருட்களில் மீட்டெடுக்கக்கூடிய விலைமதிப்பற்ற உலோகங்களின் ஆதாரங்களாக இருக்கக்கூடும் என்றும் சீன ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கம்
தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒருவர், பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற மின்னணுக் கழிவுகளிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பிரித்தெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, உரிய நிபுணத்துவம் இல்லாமல் இந்தச் செயல்முறையை முயற்சிப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்து அவர் எச்சரித்தபோதிலும், பழைய பொருட்களை விற்கும் கடைகளில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதோடு, அதிகளவிலான மக்கள் இதனை தங்களது வீடுகளிலேயே செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. விமானங்கள் ரத்து!
சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை சுத்திகரிக்கும் வீடியோ:
கியாவோ என்று அறியப்படும் அந்த நபர், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோவைச் சேர்ந்தவர். அவர் விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி 20 அன்று கியாவோ வெளியிட்ட ஒரு காணொளியில், தங்கத்தை சுத்திகரிப்பு செய்யும் செயல்முறையை விளக்கிக் காட்டினார். இது பரவலாக பலரது கவனத்தை ஈர்த்து, சமூக ஊடகங்களில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம்:
அந்தக் காணொளியில், அவர் அதிக அளவு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் மின்னணுக் கழிவுகளைச் செயலாக்குவது இடம்பெற்றது. பழைய கழிவுகளை வடிகட்டி சுத்திகரித்த பிறகு, கியாவோ கிட்டத்தட்ட 191 கிராம் தங்கத்தை பெற்றதை அந்த வீடியோல் வெளிப்படுத்தினார். அதன் மதிப்பு சுமார் 200,000 யுவான் (சுமார் ரூ.27 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தங்கத்தை தான் சிம் கார்டுகளிலிருந்து மட்டுமே பிரித்தெடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், தொலைத்தொடர்பு சாதனங்களின் சிப் கழிவுகள் உட்பட கிட்டத்தட்ட இரண்டு டன் மின்னணுக் கழிவுகளைத் தான் செயலாக்கியதாக கூறினார்.
ஆபத்தான செயல்முறை:
ஒரு சாதாரண சிம் கார்டில் பொதுவாக 0.001 கிராமுக்கும் குறைவான தங்கமே இருக்கும் என்றும், ஆனால் வங்கி அட்டை சிப்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற மற்ற பழைய பொருட்களில் மீட்டெடுக்கக்கூடிய விலைமதிப்பற்ற உலோகங்களின் ஆதாரங்களாக இருக்கக்கூடும் என்றும் சீன ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்தச் செயல்முறை ஆபத்தானது என்றும், பயிற்சி பெறாத நபர்களுக்குப் பொருத்தமற்றது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: France Hindu Temple: பிரான்சில் முதல் பாரம்பரிய இந்து கோவில் கட்டுமானம்.. BAPS வரலாற்று நிகழ்வு
பழைய சிம் கார்டுகளுக்கு அதிகரித்த மவுசு:
எனினும், அவரது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பழைய சிம் கார்டுகள், எலக்ட்ரிக் கழிவுகளை சேகரித்து தங்கத்தை பிரித்து எடுத்து வருவாயாக மாற்ற முயற்சிக்கும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.