வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..
EX PM Sheikh Hasina: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக" மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று அதாவது நவம்பர் 17, 2025 தேதியான இன்று வழங்கியுள்ளது.
வங்கதேசம், நவம்பர் 17,2025: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு இருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்த கலவர சூழலில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சொல்லி முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்ற ஆடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்:
இதனை ஆதாரமாக வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. அதாவது — கொலை, கொலை முயற்சி, சித்திரவதை, மனிதாபிமானமற்ற செயல்கள், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது, மாணவர்களுக்கு கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த அறிவுறுத்தியது, மக்கள் மத்தியில் வெறுப்பு வாதம் தூண்டும் செயல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும். மேலும் 6 நிராயுதபாணி போராட்டக்காரர்களை கொலை செய்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் முன்வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின் போது இவர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பழி போடும் செயல் என ஹசீனா தரப்பு தெரிவித்தது. ஆடியோ வெளியான ஆதாரத்தை முன்வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் காவல் ஐஜி ஆகியோர் மீது மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
மேலும் படிக்க: சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை:
இந்த சூழலில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மனிதகுலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சத்தில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.