‘மனிதகுலத்திற்கு பயங்கரவாதம் பெரும் சவால்’ பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
PM Modi Speech In Brics Summit : பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டு, பயங்கரவாதத்தை வெறும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமல்ல, வலுவான நடவடிக்கைகளாலும் கண்டிக்க வேண்டும் என்று கூறினார். காசாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அமைதிக்கான முயற்சிகளை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி
அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி (PM Modi 5 Nation Tour) 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில், ஏற்கனவே, கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜண்டினா ஆகிய நாடுகளில் தனது பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். 2025 ஜூலை 6ஆம் தேதி பிரேசில் வந்திருந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (Brics Summit) கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இதில், பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அவர் பேசுகையில், “பஹல்காமில் பாகிஸ்தானுக்கு தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கி பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது.
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவாளராக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களையும் ஆதரவாளர்களையும் ஒரே இடத்தில் வைத்து பார்க்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு மௌனமாக ஒப்புதல் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒரு அரச கொள்கையாகப் பயன்படுத்தி வருவதை இந்தியா பதினெட்டாவது முறையாக தெளிவான ஆதாரங்களுடன் காட்டியுள்ளது. எந்தவொரு நாடும் பயங்கரவாதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தால், அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி பேச்சு
There must be absolutely no hesitation in imposing sanctions against terrorists. We cannot weigh victims of terrorism and its supporters on the same scale. Any silent support or approval to terrorism for personal or political interests must be unacceptable.
— Narendra Modi (@narendramodi) July 6, 2025
பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. எத்தனை கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், மனிதகுலத்தின் நலனுக்கான சிறந்த பாதை அமைதிதான். பயங்கரவாதம் இன்று மனிதகுலத்திற்கு மிகவும் கடுமையான சவாலாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு பேரடியாகும்.
எந்த நாட்டில், யாருக்கு எதிராக தாக்குதல் நடந்தது என்பதை முதலில் பார்த்தால், அது மனிதகுலத்திற்கு எதிரான துரோகமாகும். பயங்கரவாதத்தை வெறும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமல்ல, வலுவான நடவடிக்கைகளாலும் கண்டிக்க வேண்டும்” என கூறினார். தொடர்ந்து, அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கும் என்று பிரதமர் மோடி இறுதியாக அறிவித்தார், மேலும் அனைத்து உறுப்பு நாடுகளையும் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.