”இனி அமைதியாக இருக்க மாட்டோம்” பாகிஸ்தானை கண்டித்த கனிமொழி எம்.பி!
Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றுள்ள நிலையில், அங்கு பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. அதாவது, மீண்டும் பாகிஸ்தான் தாக்கினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

கனிமொழி எம்.பி
பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தானின் எந்தஒரு விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கனிமொழி எம்.பி (Kanimozhi mp) தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் (Operation sindoor) குறித்து விளக்கம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam terror attack) 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த தாக்குதல், 2025 மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
ரஷ்யாவில் கனிமொழி எம்.பி
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது குறித்து விவரிக்க 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. கிட்டதட்ட 33 நாடுகளுக்கு 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு விரைந்துள்ளது.
இந்த குழுவுக்கு காங்கிரஸ் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து எம்.பி கனிமொழியும் இடம்பெற்றிருக்கிறார். இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு தனது ரஷ்ய பயணத்தை முடித்துள்ளது. மாஸ்கோவில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேரூடென்கோவ் உள்ளிட்டோரை இந்திய எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.
அப்போது, பயங்கரவாதம் குறித்து ரஷ்ய பிரதிநிதிகளிடம் எம்.பி. கனிமொழி எடுத்துரைத்தார். இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கனிமொழி, “இந்த கடினமான சூழலில், ரஷ்யா எங்களுடன் நிற்கிறது. எங்கள் நிலைப்பாட்டை விளக்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் எப்போது ஆதரவு தெரிவித்து வருகிறது.
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்”
இந்தியாவுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து தாக்கியது. பாகிஸ்தான் மீண்டும் எங்களை தாக்கினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். இதில் இந்தியா தெளிவாக உள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியா பாகிஸ்தான் மக்களுக்கு எதிரானது அல்ல. ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய் முதல் பிரதமர் மோடி வரை அனைவரும் பாகிஸ்தானுடனான உறவுகளை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதனை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.
முன்னதாக, திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “பயங்கரவாதம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பொதுவான பிரச்சினை என்பதை இந்தக் குழுவின் வருகை நினைவூட்டுகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்சனை.
”பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே உருவாகிறது”
அனைவரும் ஒன்றாக எதிர்த்து போராட வேண்டும். பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களும், அதற்கு உதவுபவர்களுக்கு இந்தியா பாடம் கற்றுக் கொடுக்கும். பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் நடந்தால் இந்தியா அமையாக இருக்காது. பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் உள்ளன” என்றார்.
முன்னதாக, பஹ்ரைனில் பேசிய எம்பி அசாதுதீன் ஒவைசி, ” இந்தியா பல ஆண்டுகளாக எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை உலக நாடுகளுக்கு தெரிந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் பல அப்பாவி உயிர்களை இழந்துள்ளோம். பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்து மட்டுமே உருவாகிறது. பாகிஸ்தான் இந்த பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதையும், உதவுவதையும், நிதியுதவி செய்வதையும் நிறுத்தும் வரை, இந்தப் பிரச்சினை நீங்காது. ஒவ்வொரு இந்தியரின் உயிரையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.