2030க்குள் தண்ணீர் இல்லாத நகரமாக மாறும் காபூல்? காரணம் என்ன?
Kabul Water Crisis Alert : ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலில் சுமார் 60 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. அதிகமாகக் கிணறுகள் தோண்டி நீர் எடுக்கப்படுவது, மழை குறைவு, அரசின் செயல்பாடுகள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் இல்லாத நகரமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) தலைநகரமான காபூல் (Kabul), அடுத்த 5 ஆண்டுகளில் குடிநீர் இல்லாத முதல் பெரிய நகரமாக மாறக்கூடும் என மெர்சி கார்ப்ஸ் (Mercy Corps) என்ற அமைப்பின் புதிய அறிக்கை எச்சரிக்கிறது. சுமார் 60 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரம், நிலத்தடி நீர் மட்டம் தினசரி குறைவதால், மிக கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது. காபூலின் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 25 முதல் 30 மீட்டர் வரை குறைந்துள்ளது. பாசனத்திற்கும், குடிநீரிற்கும் அளவுக்கு மேல் நீர் எடுத்துக்கொள்ளப்படுவதால், வருடத்திற்கு சுமார் 44 மில்லியன் கன மீட்டர் நீர் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
UNICEF-ன் கணிப்பின்படி, காபூலில் உள்ள நிலத்தடி நீர் கிணறுகளில் பாதி வரை காய்ந்துவிட்டன. அதே நேரம், 80 சதவிகித நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கழிவுநீர், அர்செனிக் மற்றும் உப்புத்தன்மை போன்றவற்றால் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காபூல் நகரில் நிலத்தடி நீர் குறைவதற்கான காரணம் என்ன?
காபூலின் நீர் நெருக்கடிக்குப் பல காரணங்கள் உள்ளன.




காலநிலை மாற்றம் காரணமாக மழை மற்றும் பனியால் கிடைக்கும் நீர் மிகவும் குறைந்துவிட்டது
-
கடந்த 2001 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் இருந்த நகரம் இன்று 60 லட்சம் மக்களை கொண்டுள்ளது
-
தற்போது தாலிபான் ஆட்சி வந்த பிறகு நீர் மேலாண்மைக்கான பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
-
சமீப காலங்களில் பன்னாட்டு நிதியுதவிகள் இல்லாமை
இது குறித்து நீர் மேலாண்மை நிபுணர் அசீம் மயார் கூறுகையில், “நீரின்றி வாழும் நகரமாக காபூல் மாறும் அபாயம் மிக நெருக்கத்தில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
தண்ணீர் பெரும்பாலும் கிணறுகளில் இருந்து கிடைக்கிறது. பணக்காரர்கள் மேலும் ஆழமாக கிணறு தோண்டி தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஏழைகள் நீர் கிடைக்கும் வரை நகரில் சுற்றி சுற்றி தேட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
தொழிற்சாலைகள் மற்றும் குளிர்பான நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்பு
-
அலோகோசாய் போன்ற பிரபல குளிர்பான நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை பாசனத்திற்கு எடுத்துக்கொள்கிறது.
-
குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நீரை தவறாக பயன்படுத்துகின்றன.
-
400 ஹெக்டேர்கள் பசுமை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 4 பில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
வெப்பம் அதிகரிப்பு
கடந்த 2023 – 2024 காலகட்டத்தில் காபூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் சராசரியாக 45% – 60% மட்டுமே மழை பதிவாகியிருக்கிறது. மூன்று முக்கியமான ஆறுகள் காபூல், பக்மான், லோகர் ஆறுகள் பனிப்பொழிவின் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை நீடித்து வருகிறது.
இதற்கு தீர்வு என்ன?
-
நிலத்தடி நீர் மீண்டும் அதிகரிக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு மற்றும் பாசன வசதிகளை உருவாக்க வேண்டும்.
-
மழைநீரை சேமிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குன்றுகளிலோ, சிற்றாறு பகுதிகளிலோ அணைகள் கட்டப்பட வேண்டும். பழைய நீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய்கள் அமைக்கவும், தற்போதுள்ள நீர் வசதிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
-
நீரை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடவேண்டும்.