ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்.. டிரம்ப் பரபரப்பு பதிவு!
Israel and America Started Attacking Iran | கடந்த சில நாட்களாகவே ஈரான் உடன் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கா, பிப்ரவரி 28 : ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா (America) இடையே அணு ஆயுதம் விவகாரம் தொடர்பாக தொடர் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், இஸ்ரேல் (Israel) உடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஈரானின் முக்கிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது இந்த இரு நாடுகளும் தொடங்கியுள்ள தாக்குதல் உலக அளவில் புவிசார் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த மோதல்
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும், கமேனி ஆட்சியை எதிர்த்தும் மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது ஈரான் ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை என்றால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தார். அதுமட்டுமன்றி, அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிக கடுமையான மோதல் நிலவி வந்தது.
இதையும் படிங்க : அப்பாவிகள் கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது… இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
அணு ஆயுதங்களை தயாரிப்பதை ஈரான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி வந்த டிரம்ப், கடந்த சில நாட்களுக்கு முன்பு அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக ஓமன் நாட்டின் உதவியுடன் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று டிரம்ப் கூறி வந்தார். இதற்கிடையே அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் தனது படைகளை அதிகரித்து வந்தது.
ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ள இஸ்ரேல், அமெரிக்கா
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 28, 2026) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழிந்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈராணுக்கு அணு ஆயுதங்கள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம். ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும். போர் நடக்கும்போது நல்லது, கெட்டது இரண்டுமே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.