விண்வெளியில் பாலூட்டிகள் இனப்பெருக்கம் செய்ய முடியுமா?.. எலிகளை வைத்து ஆய்வு செய்த சீன விஞ்ஞானிகள்!
Mammal Reproduction Test With Mice In Space | விண்வெளியில் பாலூட்டிகள் இனப்பெருக்கம் செய்ய முடியுமா என்பதனை சோதனை செய்ய சீன விஞ்ஞானிகள் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் எலிகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டது வெற்றி கண்டுள்ளது.
பீஜிங், டிசம்பர் 28 : விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியா (India) உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. பூமியை தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதர்கள் அல்லது வேறு ஏதேனும் உயிர்கள் வாழ ஏதுவான சூழல் உள்ளதா என்பது குறித்து கண்டறிய தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனா (China) சமீபத்தில் தனது தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 4 எலிகளை அனுப்பி வைத்தது. விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து சோதனை மேற்கொள்ளும் வகையில் இரண்டு ஆண் எலிகள் மற்றும் இரண்டு பெண் எலிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இரண்டு வாரங்களுக்கு பிறகு பூமிக்கு கொண்டுவரப்பட்ட எலிகள்
நுண்ஈர்ப்பு விசை மற்றும் அடைப்பட்ட சூழலில் ஏற்படும் உயிரியல் விலைவுகளை தெரிந்துக்கொள்வதன் நோக்கமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விண்வெளியில் இரண்டு வாரங்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர், அந்த நான்கு எலிகளும் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒரு பெண் எலி மொத்தம் 9 குட்டிகளை ஈன்றிருந்தது. இது விண்வெளியில் பாலூட்டிகளில் இனப்பெருக்கத்தை புரிந்துக்கொள்ளும் ஆய்வின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி, நீண்டகால மனித விண்வெளி பயணங்களுக்கு வழிவகை செய்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : 2025ல் உலகையே உலுக்கிய போர் – மோதல்களும்.. நீடிக்கும் பதற்றமும்.. ஒரு பார்வை




குட்டிகளை ஈன்ற எலி எவ்வாறு நடந்துக்கொண்டது?
குட்டிகளை ஈன்ற அந்த பெண் எலி முன்னெச்சரிக்கையுடன் நடந்துக்கொண்டதாகவும், குட்டிகளை ஈன்ற உடன் தனிமையான மற்றும் மறைவான இடத்தை அந்த எலி தேர்வு செய்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த எலி விண்வெளியில் ஈன்ற மொத்த 9 குட்டிகளில் 6 குட்டிகள் தற்போது உயிருடன் உள்ளதாகவும், அவை அனைத்தும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : துருக்கியில் நடந்த விமான விபத்து.. லிபிய ராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி.. என்ன நடந்தது?
விண்வெளியில் பாலூட்டிகள் இனப்பெருக்கம் தொடர்பாக சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், விண்வெளியில் மனிதர்களின் வாழ்வியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.