இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
India - Pakistan War | இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த சண்டை ஒருசில நாட்களுக்கு பிறகு முடிக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் இந்த போரை நிறுத்தியதாக இந்தியா கூறும் நிலையில், தனது தலையிடல் காரணமாக தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கா, ஆகஸ்ட் 04 : இந்தியா – பாகிஸ்தான் போரை (India – Pakistan War) தான் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 03, 2025) வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து அமெரிக்க அதிபரி டிரம்ப் பதிவிட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறும் டிரம்ப்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஆப்ரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்த இந்திய அரசு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோவை பகிர்ந்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சை!
இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் ஐந்து நாட்கள் இந்த சண்டை நீடித்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசு சார்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் அதனை அறிவித்திருந்தார். தனது மத்தியஸ்தத்தின் பெயரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரஸ் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையும் படிங்க : Donald Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நரம்பு நோய்..விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை!
மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கும் டிரம்ப்
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இந்திய அரசு கூறும் நிலையில், டிரம்ப் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறி வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில், இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்குன் இடையேயான மோதல்களை தான் தலையிட்டு தீர்த்து வைத்ததால் அவை நிறுத்தப்பட்டன என்று கூறியுள்ளார்.