ஒரு வருடமாக செயல்பட்டு வந்த போலி காவல் நிலையம் – சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்

Fake Police Station in Bihar : பீகாரில் கடந்த ஒரு வருட காலமாக போலியாக காவல் நிலையம் செயல்பட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக உண்மையான காவலர்கள் போலவே செயல்பட்டு வந்த அவர்கள், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலித்து வந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு வருடமாக செயல்பட்டு வந்த போலி காவல் நிலையம் - சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்

பீகாரில் செயல்பட்டு வந்த போலி காவல் நிலையம்

Updated On: 

11 Jun 2025 20:31 PM

பாட்னா, ஜூன் 11: பீகார் (Bihar) மாநிலம் புர்னியா மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்ட போலி காவல் நிலையம் (Police Station) தொடர்பான செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  மாத்யா வித்யாலயா பேட்டவுனா என்ற பள்ளியில் கடந்த ஒரு வருட காலமாக இந்த போலி போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்துள்ளது. இதன் தலைவராக இருந்த ராகுல் குமார் சாக், தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் சமீபத்தில் சாமஸ்திபூர் மாவட்டத்தில் போலி காவல்துறை ஆய்வாளர் சரோஜ் சிங் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  ராகுல் குமார் சாக் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்களிடம் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை வசூலித்துள்ளார்.

மேலும் காவல்துறை சீருடை, லத்தி, போலியான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி, அவர்களை போலி காவலர்களாக நியமித்து, வாகன சோதனை, மதுபான கடத்தல் தடுப்பு போன்ற பணிகளை கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள்,  லைசன்ஸ் இல்லாமல் வருபவர்களிடம் ரூ.400 அபராதம் விதித்து வந்துள்ளனர். இந்த 400 ரூபாயில் 200 ரூபாய் போலி காவலர்களுக்கு கமிஷனாகவும், மீதி ராகுல் குமாருக்கும் சென்றுள்ளது.

குடியரசு தினத்தில் போலி காவலர்களுக்கு பாராட்டு விழா

இந்த போலி காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 26, 2025 அன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு போலி காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தியது. இதில் ஹைலைட் என்னவென்றால் கிராம அதிகாரிகள் மற்றும் கிராமத்து தலைவர்கள் இதில் பங்கேற்றது தான். இதனையடுத்து உள்ளாட்சி நிர்வாகம் இது பற்றி முன் கூட்டியே அறிந்திருந்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலி காவல் நிலையம்

 

காஸ்பா தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகம்மது அப்துல் அஃபாக் ஆலாம், இது போன்ற பெரிய முறைகேடுகள் போலீசாருக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இந்த நிலையில் ராகுல் குமார் சாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமைறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இரண்டு நாட்களுக்குள் சரணடையாவிட்டால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த சூழ்நிலையிலும் இன்னமும் இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெறுவது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை அவசியம் என சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.