ஏஐ காரணமாக இந்த 8 வேலைகள் இருக்காது – எச்சரிக்கும் ஃபைவர் சிஇஓ
Fiverr CEO’s AI Warning : ஃபைவர் நிறுவனத்தின் CEO மைக்கா காஃப்மன் தனது பணியாளர்களுக்கு அனுப்பிய இமெயிலில், AI தொழில்நுட்பம் விரைவில் புரோகிராமர்ஸ், டிசைனர்ஸ், வழக்கறிஞர்கள் உட்பட பல தொழில்கள் இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார். அது எந்தெந்த வேலைகள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சமீப காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பலர் வேலை பறிபோகும் ஆபத்தில் இருக்கின்றனர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல துறைகளை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் நமக்கு இது உதவிகரமானதாக இருக்கும் என சொல்லப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏஐ காரணமாக பல வேலைகள் காணாமல் போகும் எனவும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் ஃபைவர் (Fiverr) நிறுவனத்தின் சிஇஓ மைக்கா காஃப்மன் தனது நிறுவன ஊழியர்களுக்காக எழுதிய ஒரு முக்கியமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏஐ காரணமாக பறிபோகும் வேலைகள்
இந்த மின்னஞ்சலில், “ஏஐ உங்கள் வேலையை தனதாக்கி கொள்ளப்போகிறது. என்னுடைய வேலையையும் கூட என எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார். இது அவரது பணியாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளில் உள்ள பணியாளர்களுக்கும்விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாவது, புரோகிராமர்ஸ், டிசைனர்ஸ், புராடெக்ட் மேனேஜர்ஸ், டேட்டா சைன்டிஸ்ட், வழக்கறிஞர்கள், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள், விற்பனையாளர், பொருளாதார நிபுணர்கள் என எட்டு முக்கியமான தொழில்கள் மிக விரைவில் AI மூலமாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
வேலை பறிபோவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தொழில்துறை முழுவதும் ஏஐ மிக வேகமாக நுழைந்து கொண்டிருக்கிறது. சாதாரண வேலைகளை சுலபமாக முடிக்கிறது; கடின வேலைகளையும் இப்போது AI எளிதாக்கியுள்ளது. இது ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல, இது ஒவ்வொருவரும் தங்களது திறன்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. ஏஐ க்கு பயப்பட வேண்டியதில்லை. தங்களது துறைக்கேற்ப ஏஐ சார்ந்த டூல்கள் பற்றி கற்றுக்கொள்வது அவசியம். குறிப்பாக புரோகிராமர்ஸ் Cursor என்ற ஏஐ டூலையும், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் Intercom Fin என்ற ஏஐ டூலையும், சட்ட ஆலோசகர்கள் Lexis+AI என்ற ஏஐ டூலையும் கற்றுக்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
பணியாளர்கள் ஏஐ தொடர்பான தொழில்நுட்பங்களை கையாளும் திறமை பெற்றுள்ள நபர்களை அடையாளம் காண வேண்டுமெனவும், தங்களது செயல்திறனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கூகுளின் கதை முடிந்து விட்டது என சுட்டிக்காட்டியுள்ள அவர் Prompt engineering கற்றுக்கொள்ளாதவர்கள் பின் தங்கிவிடுவார்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு புதிய பணியாளர்களை சேர்க்கும் முன் தற்போது ஏஐ மூலம் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க வழிகளை தேட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மின்னஞ்சல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு நம்முடைய வேலைவாய்ப்பு எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நேரத்தில், காலத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பிக்காத பணியாளர்கள் வேலை இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது. ஏஐக்கு எதிரான பயப்படுவதை விட, அதனை எப்படி தங்களது வேலைகளில் ஒருங்கிணைக்கலாம் என யோசிக்க வேண்டிய காலம் இது.