Madurai: மகள் காதல் திருமணம்.. மாப்பிள்ளை கார் ஏற்றி கொலை.. மதுரையில் பகீர் சம்பவம்!
மதுரை மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் சதீஷ்குமார் கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விபத்து போல தோன்றிய நிலையில், போலீஸ் விசாரணையில் இது திட்டமிட்ட கொலை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரையில் கொலை சம்பவம்
மதுரை, ஆகஸ்ட் 18: மதுரை மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் இந்த சம்பவம் விபத்து என கருதப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இது திட்டமிட்ட சதி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. என்ன நடந்தது என பார்க்கலாம். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 21 வயதான இவர் தும்பை பட்டி பகுதியைச் சேர்ந்த ராகவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ராகவிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். எனவே குழந்தைகள் இருவரும் ராகவியின் பெற்றோரிடம் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு
இதற்கிடையில் சதீஷ்குமார், ராகவி இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் வயது வித்தியாசம் காரணமாக ராகவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பதியினர் இருவரும் திருச்சியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் ராகவியின் முதல் கணவர் செல்வத்தை திருமணம் செய்த போது தாங்கள் போட்ட நகைகளை திரும்பத் தருமாறு ராகவியிடம் பெற்றோர் கேட்டுள்ளனர்.
Also Read: தந்தை கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்.. மார்க்கெட்டில் இளைஞர் செய்த வெறிச்செயல்!
ஆனால் அவற்றை தான் சதீஷ்குமாரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மேலூர் காவல் நிலையத்தில் ராகவி மீது அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இரு தரப்பினரையும் அழைத்து நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நாளை (ஆகஸ்ட் 17) வருமாறு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சதீஷ்குமார் தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி ராகவியை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
தொடர்ந்து அய்யாப்பட்டி விலக்கு அருகே சென்ற போது அவர்களின் இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராகவி உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து சென்று ராகவியை மீட்டு மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சதீஷ்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Also Read: Online Gambling: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!
திட்டமிட்ட கொலை
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என தெரியவந்தது. அய்யாப்பட்டி விலக்கு அருகே சென்ற போது ராகவி குடும்பத்தினரின் கார் ஒன்று பயங்கர வேகத்தில் மோதியதாக கண்டறியப்பட்டது. மேலும் கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கோபம் தீராத ராகவி குடும்பத்தினர் இருவரையும் கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ராகவி குடும்பத்தினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த கொட்டாம்பட்டி போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.