‘5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ, அமைச்சராக போகிறீர்கள்’.. பரபரப்பை கிளப்பிய அன்புமணி!
Anbumani ramadoss; ஏற்கெனவே, பாமக 2 அணிகளாக பிரிந்து உள்ளது. ஆனால், அன்புமணி ராமதாஸ் அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல், தேர்தல் பணிகளை பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டார். எனினும், கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே, தேர்தலில் அவர்கள் நினைத்தது நடக்கும் சூழல் ஏற்படும் என்கின்றனர்.

அன்புமணி ராமதாஸ்
சென்னை, நவம்பர் 13: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரை எந்த கட்சியும் தங்களது கூட்டணியை இறுதி செய்ததாக தெரியவில்லை. அதனால், தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை இறுதி செய்துள்ளது. எனினும், அது தேர்தல் நெருங்கும் சமயம் அக்கூட்டணி நீடிக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில், இம்முறை மக்களிடையே செல்வாக்கு உள்ள நடிகர் விஜய் தேர்தலை சந்திக்கிறார். அதோடு, தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் அதிகாரம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதனால், 2026 சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை காணாத அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.
இதையும் படிக்க : அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தமிழகத்தில் பரபரப்பு!!
அந்தவகையில், சென்னையில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அதில், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் சங்கம் , மாணவர் சங்கம் மற்றும் மகளிர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 மாதங்களில் மாற்றம்:
அப்போது நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, இன்னும் 5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ ஆக போகிறீர்கள். அதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாக இருந்தால் வேலைக்காகாது என பேசியது நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது பேச்சை வைத்து பார்க்கும்போது, தேர்தலில் நிச்சயம் அவர் தனித்து போட்டியிடுவதற்கான சாத்தியம் குறைவு எனத் தெரிகிறது. அதேசமயம், கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தார் என்றால், இரு பிரிவாக இருக்கும் கட்சி, ஒரே அணிக்கு வர வேண்டும். இல்லையெனில், யார் உண்மையான பாமக என்பதில் குழப்பம் நீடிக்கும்.
அதோடு, அன்புமணி பேச்சை வைத்து பார்க்கும்போது, அவர் ஆட்சியில் பங்கு கோருவது போன்று தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது, தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்பது போல கோரிக்கை வைக்கலாம். அதுபோன்ற கோரிக்கை அதிமுக, திமுக போன்ற பழம்பெரும் கட்சிகளுடன் அமைய வாய்ப்பில்லை என்கின்றனர்.
பாமக – தவெக கூட்டணி?:
அப்படியென்றால், அவர் தவெகவுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும். ஏனெனில், அன்புமணி கூறியது போல் தனது கட்சி நிர்வாகிகள் அமைச்சர் ஆக வேண்டுமென்றால் அது விஜய்யுடன் இணைவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். ஏற்கெனவே, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அதனால், அன்புமணி ஏற்கெனவே விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!
திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பது புதிதான ஒன்றாகும். தமிழகத்தில் இதுவரை எந்த ஆளும் கட்சியும் இதற்கு முன்வந்ததில்லை. கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தது இல்லை. இந்தநிலையில், விஜய்யின் அரசியல் வருகையால் இந்த தேர்தலில் கூட்டணி கணக்குகள் முற்றிலும் மாறுவதற்கான வாய்ப்பும், தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பாக மாறும் சூழலும் அதிகம் உள்ளதாக தெரிகிறது.